உலகம்
Typography

அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்ற தெஹ்ரீக் ஏ இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் அந்நாட்டுப் பிரதமராக ஆகஸ்ட் 11 ஆம் திகதி பதவியேற்கின்றார்.

இவ்விழாவில் பங்கேற்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட சார்க் நாடுகளைச் சார்ந்த அனைத்துத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்க இம்ரான் கான் திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பான முடிவை முன்னால் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானின் கட்சி விரைவில் கலந்தாலோசித்து எடுக்கவுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. இம்ரான் கானின் கட்சி அதிகளவாக 116 இடங்களில் வெற்றி பெற்றது. முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் முஸ்லிம் லீக் கட்சி 64 இடங்களையும் பிலாவல் பூட்டோ சர்தாரியின் கட்சி 43 இடங்களையும் பிடித்தன. சுயேச்சை வேட்பாளர்கள் 13 பேர் வெற்றி பெற்று எம் பிக்களாகியுள்ளனர்.

அறுதிப் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளை சேர்த்துக் கொண்டு இம்ரான் கான் ஆட்சியமைப்பார் எனக் கணிக்கப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான் ஆகஸ்ட் 11 ஆம் திகதி அவர் பிரதமராகப் பதவியேற்கவுள்ளார். பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற இம்ரான் கானுக்கு இந்தியப் பிரதமர் மோடி ஏற்கனவே தொலைபேசி வாயிலாக வாழ்த்துக்களைத் தெரிவித்து விட்டார்.

இந்நிலையில் சார்க் அமைப்பைச் சேர்ந்த இலங்கை, பூட்டான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், மாலைத் தீவுகள் ஆகிய நாடுகளின் தலைவர்களும் அழைக்கத் திட்டமிடப் பட்டு வருகின்றது. இதேவேளை அண்மையில் நெஞ்சு வலி மற்றும் சிறுநீரகப் பாதிப்பு காரணமாக இஸ்லாமாபாத் அறிவியல் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்ட பாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் சிகிச்சை முடிந்து மறுபடியும் சிறையில் அடைக்கப் பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS