உலகம்

சிம்பாப்வேயில் திங்கட்கிழமை நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அதிபர் எமர்சன் நங்கக்வா வெற்றியடைந்ததாக அறிவிக்கப் பட்டிருந்தது.

37 ஆண்டு காலமாக ஆட்சி செலுத்தி வந்த ராபர்ட் முகாபே கிளர்ச்சி மூலம் பதவியில் இருந்து விலகிய பின்னர் முதன்முறையாக நடைபெற்ற இப்பொதுத் தேர்தல் ஜனநாயக மாற்றத்தை அங்கு ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் பட்டது.

இத்தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டி எதிர்க் கட்சிகள் தேர்தல் முடிவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. முக்கியமாக இந்த முறைகேடுகள் குறித்த உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்துக்குச் செல்லவுள்ளதாக சிம்பாப்வே எதிர்க்கட்சித் தலைவர் நெல்சன் சாமிசா அறிவித்துள்ளார். தேர்தல் முடிவின் படி 50% வீதத்துக்கும் சற்று அதிகமாக அதாவது 50.8% வாக்குகளை முனங்காக்வா பெற்றிருந்த காரணத்தால் எதிர்க் கட்சியினரால் 2 ஆவது முறை தேர்தலை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் நங்கக்வா இன் வெற்றியை தேர்தல் ஆணையமும் உறுதி செய்துள்ளது.

ஆனாலும் தேர்தல் முறைகேடுகளை வலியுறுத்தி எதிர்க் கட்சியினர் நடத்திய போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இதை அடுத்து போராட்டக் காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகினர். வன்முறையை மேலும் கட்டுப்படுத்த முக்கிய பகுதிகளில் இராணுவம் குவிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தலில் அளவுக்கு அதிகமாக சிம்பாப்வே இராணுவத்தை அரசு பிரயோகித்ததாக ஐரோப்பிய கண்காணிப்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்த முயன்ற எதிர்க் கட்சியினரை சிம்பாப்வே அதிரடிப் படை தடுத்து நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.