உலகம்
Typography

இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசியாவின் லொம்பொக் தீவுக்கு அருகே 7 ரிக்டரில் தாக்கிய கடுமையான நிலநடுக்கத்துக்கு இதுவரை 39 பேர் பலியாகி உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் சுனாமி எச்சரிக்கையும் உடனடியாக விடுக்கப் பட்டது. மிகவும் சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட வலிமையான அதிர்வுகளினால் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கடும் பதற்றம் ஏற்பட்டது.

இந்த அதிர்வு பிரபல பாலி சுற்றுலாத் தீவுப் பகுதியிலும் உணரப் பட்டது. நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த லொம்பொக் தீவுப் பகுதியில் ஆயிரக் கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளி அரங்குகளில் குவிந்தனர். மேலும் இத்தீவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் மொத்தம் 39 பேர் இதுவரை நிலநடுக்கத்தால் பலியானதாக அகுங் ப்ரமுஜா என்ற அனர்த்த முகாமை அமைப்பு ராய்ட்டர்ஸ் ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் மத்தியில் பலியானவர்களது எண்ணிக்கை தற்போது கணக்கிடப் பட்டு வருகின்றது.

இந்த நிலநடுக்கம் காரணமாகப் பல இடங்களில் கட்டடங்கள் சேதமடைந்து மின்சாரமும் துண்டிக்கப் பட்டுள்ளது. ஆயினும் இந்த அதிர்வுகளால் பாரிய சுனாமி அலைகள் ஏதும் ஏற்படாததால் சுனாமி எச்சரிக்கை மீளப் பெறப்பட்டது. கடந்த வாரம் இதே பகுதியில் 6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 12 பேருக்கும் அதிகமானவர்கள் காடயம் அடைந்தும் நூற்றுக் கணக்கான கட்டடங்கள் சேதமடைந்தும் இருந்தன. பசுபிக் சமுத்திரத்தின் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியா உலகில் அதிகளவில் பூகம்பங்கள் மற்றும் எரிமலை செயற்பாடு இடம்பெறும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்