உலகம்
Typography

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கோஃபி அனான் இன்று தனது 80 வது வயதில் காலமானார். 

ஐ.நாவின் செயலாளர் நாயகாம பதவி வகித்த ஒரே ஒரு ஆபிரிக்க இனத்தவர் கோஃபி அனான்.

கடந்த சில வருடங்களாக சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் வசித்து வந்த அவர், இன்று திடீர் சுகயீனம் காரணமாக பேர்ன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அங்கு வைத்து காலமானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடைய சொந்த நாடான கானாவில் தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

ஐ.நாவின் செயலாளர் நாயகமாக 1997 முதல் 2006 வரை இரு தடவை பதவி வகித்த கோபி அனான், அவருடைய மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக சமாதானத்துக்கான நோபல் பரிசினையும் பெற்றிருந்தார்.

செயலாளர் நாயகம் பதவியிலிருந்து விலகிய பின்னர், சிரியாவுக்கான ஐ.நாவின் விசேட தூதுவராக தொடர்ந்து கடமையாற்றி வந்தார்.

அமெரிக்கா மீதான அல் கைதாவின் தீவிரவாத தாக்குதல், இதையடுத்து ஈராக், ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க போர் மற்றும் உலகாவிய எச்.ஐ.வி தொற்று என்பன கோஃபி அனானின் ஐ.நா பதவிக் காலத்தில் மிகப்பெரும் சவாலாக இருந்தன. இக்காலப்பகுதியில் ஐ.நா சபையின் நிர்வாக கட்டமைப்பை பெரும் சீர்திருத்தம் செய்து ஐ.நா சபையின் ஊடாக சர்வதேசம் இச்சிக்கல்களில் தலையிட்டு ஒரு தீர்வை பெற்றுத் தர முடியும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தவர் கோஃபி அனான்.

இதை விட சிறார் இறப்பைத் தடுத்தல், வறுமையை நீக்கல் என்பவற்றுக்காக ஐ.நாவின் ஊடாக கடுமையாக போராடியிருந்தார் கோஃபி அனான்.

எனினும் கோஃபி அனான் மீது விமர்சனங்களும் இருந்தன. அவர் ஐ.நா தலைமைச் செயலாளர் பதவிக்கு வரும் முன்னர்,  ஐ.நாவின் சாமானாத நடவடிக்கைகளுக்கான பிரிவின் தலைவராக இருந்த காலத்திலேயே ருவெண்டா இனப்படுகொலைகள், யுகொஸ்லாவிய படுகொலைகள் நடந்தேறின. எனினும் அவற்றை முன்கூட்டியே தடுக்க கோஃபி அனானினாலும் இயலவில்லை.

 அனானின் இழப்பு, உலகில் நல்லிணக்கத்தை விரும்பும் பல சர்வதேச தலைவர்களிடம் பெரும் துக்கத்தையும், அவருடைய பதவிக்காலத்தில் பெரிதும் நம்பிக்கையுற்றிருந்த இளைஞர்களிடம் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்