வியாழக்கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் இன் புறநகர்ப் பகுதியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய திடீர் கத்திக் குத்துத் தாக்குதலில் தாயும் மகளும் என இருவர் உயிரிழந்துள்ளனர்.
பின்னதாக இத்தாக்குதலுக்கு ISIS தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்தை பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரார்ட் கோலொம்ப் நேரில் பார்வையிட்டார். அதன் பின் அவர் மீடியாவுக்கு அளித்த தகவலில்,
கத்தியுடன் வந்த மர்ம நபர் வெறித்தனமாகத் தாக்கியதில் தாயும் மகளும் கொல்லப் பட்டதை உறுதி செய்ததுடன் காயம் அடைந்த ஒருவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். தாக்குதல் நடத்திய குறித்த நபர் 2016 ஆம் ஆண்டு முதல் தேடப் படும் தீவிரவாதிகளின் பட்டியலில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. பாரிஸ் நகரில் இருந்து 30 Km தூரத்திலுள்ள டிராப்பர்ஸ் என்ற நகரில் இந்த கத்திக் குத்துத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பிரான்ஸில் அண்மைக் காலமாகத் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிலும் முக்கியமாக கத்திக் குத்துத் தாக்குதல்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. திடீரென பொதுவெளியில் கத்தியுடன் நுழையும் ஆசாமிகள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் காயப் படுத்தி விட்டு தப்பி ஓடுகின்றார்கள். அரிதாகவே போலிசாரிடம் சிக்கும் இவர்களில் கணிசமானவர்கள் தீவிரவாதத்துடன் தொடர்பு அற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற தாக்குதல்கள் அதிகரித்த பின்னர் பிரான்ஸ் அரசு தமது மக்களைக் காப்பதற்கென மிகவும் திட்டமிட்டு பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த கண்காணிப்பில் போலிசாரை ஈடுபட வைத்து வருகின்றது.