உலகம்
Typography

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தைத் தணிக்க அவ்விரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் ஏற்பட வேண்டும் எனவும் அதற்கு உதவத் தயாராக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நோக்கம் நிறைவேற ஆக்கபூர்வமாக சீனா செயற்படும் என்றும் சீனா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் லு காங் கருத்துத் தெரிவிக்கையில், 'தெற்காசியாவில் இவ்விரு நாடுகளும் அண்டை நாடுகள் என்பது மட்டுமல்லாது அணுவாயுதங்களைக் கொண்டுள்ள தேசங்களும் ஆகும். இதனால் இவ்விரு தேசங்களும் தம் வேறுபாடுகளைக் களைந்து விட்டு தமக்கிடையே பரஸ்பர நம்பிக்கை ஏற்படவும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவும் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம். இப்பிராந்தியத்தில் அமைதி மற்றும் வளர்ச்சி ஏற்பட ஆக்கபூர்வமாகப் பணியாற்ற விரும்புகின்றது' என்றுள்ளார்.

மறுபுறம் பாகிஸ்தான் இராணுவத்தை மென்மேலும் சீனா நவீனப் படுத்தி வருகின்றது. இதனால் பாகிஸ்தானோ ராஜஸ்தான் எல்லையில் அச்சமின்றி ஆயுதங்களைக் குவித்து வருவதால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுடன் இந்தியத் துணைக் கண்டத்தில் இராணுவ சமநிலை குறையவும், பதற்றம் ஏற்படவும் வழி ஏற்பட்டுள்ளது.

அண்மையில் இரவுப் பொழுது ஒன்றில் எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் நடத்திய போது அவர்களை இந்திய வீரர்களால் இனம் காண முடியவில்லை. இதற்குக் காரணமாக குறித்த பாகிஸ்தான் துருப்புக்கள் சீனாவிடம் இருந்து பெற்ற நவீன வெப்ப ஜாக்கெட்டை அணிந்து இருந்ததால் அவர்களை இரவுக் கண்ணாடி மூலம் காண இயலாததே காரணம் என பின்னர் இந்திய உளவுத் துறை கண்டறிந்துள்ளது. அண்மைக் காலமாக சீனாவிடம் இருந்து இணைய ஃபைபர் ஆப்டிக் கேபிள் மற்றும் ஆயுத தொழிநுட்ப உதவிகளைப் பெற்று வரும் பாகிஸ்தான் இந்தியாவின் ராஜஸ்தான் ரமிம் யார் கான் என்ற மாவட்டத்தில் இந்திய எல்லையில் இருந்து 37 Km தொலைவில் ஆயுதங்களைக் குவித்தும் பதுங்கு குழிகளைக் கட்டியும் வருகின்றது.

இதனால் இந்தியா கலக்கம் அடைந்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS