அவுஸ்திரேலியாவின் ஆளும் லிபரல் கட்சியின் புதிய தலைவராக அண்மையில் தேர்வு செய்யப் பட்ட ஸ்காட் மாரிசன் வெள்ளிக்கிழமை அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராகத் தேர்வாகி உள்ளார்.
மேலும் இவர் அடுத்த வருடம் 2019 இல் அவுஸ்திரேலியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் வரை அந்நாட்டுப் பிரதமராகப் பதவி வகிப்பார் என்று தெரிய வருகின்றது.
அண்மைக் காலமாக அவுஸ்திரேலியாவின் அரசியலில் நிச்சயமற்ற தன்மை இருந்து வருகின்றது. ஆளும் லிபரல் கட்சியிலேயே புதிய பிரதமருக்கான அதிகாரப் போட்டி நிலவி உட்கட்சிப் பூசல் ஏற்பட்டுள்ளது. இதே லிபரல் கட்சியைச் சேர்ந்த முன்னால் பிரதமரும் முன்னால் வங்கி அதிகாரியுமான மால்கம் டர்ன்புல் கடந்த 3 ஆண்டுகளாகப் பிரதமராகப் பதவி வகித்த போதும் கட்சியில் இவருக்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.
இவரது ஆட்சியை எதிர்த்து உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் உட்பட 3 அமைச்சர்கள் பதவி விலகினர். இதனால் மறு வாக்கெடுப்பு நிகழ்த்தப் பட்டது. இதில் தான் போட்டியிடப் போவதில்லை என டர்ன்புல் அறிவித்தார். எனவே இந்த வாக்கெடுப்பில் வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷ்ப் மற்றும் பொருளாளர் ஸ்காட் மாரிசன் ஆகியோருக்கிடையே பிரதமர் பதவிக்குப் போட்டி நிலவியது. இந்தப் போட்டியில் கூடுதல் வாக்குகளால் வெற்றி பெற்ற ஸ்காட் மாரிசன் வெள்ளிக்கிழமை அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றார்.
2013 முதல் 2015 வரை அவுஸ்திரேலியாவின் குடிவரவுத் துறை அமைச்சராக ஸ்காட் மாரிசன் பணியாற்றிய போது சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் வரும் வதிவிடக் கோரிக்கையாளர்களது படகுகளைத் திருப்பி அனுப்பும் நடைமுறையை அறிமுகப் படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.