உலகம்
Typography

அமெரிக்காவின் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளராகவும் செனட்டராகவும் விளங்கிய 81 வயதாகும் ஜோன் மெக்கைன் மூளைப் புற்று நோய் காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை காலமாகி உள்ளார்.

கடந்த வருடம் தொடக்கம் இந்நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த ஜோன் மெக்கைனுக்கு வெள்ளிக்கிழமை முதற்கொண்டு சிகிச்சை நிறுத்தப் பட்டது.

இதை அடுத்து ஜோன் மெக்கைன் தன் கையாலேயே தனது உயிர்ப் பாதுகாப்புப் பொறிமுறையை நீக்கம் செய்ததாகவும் இதைத் தொடர்ந்து ஒரு தினத்தில் அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை மாலை இயற்கை எய்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 6 முறை செனட்டராகப் பதவி வகித்த மெக்கைன் 2008 ஆமாண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

வியட்நாம் போரின் போது விமானியாகப் பெரும் பங்கு வகித்த மெக்கைன் அப்போரின் நாயகனாகப் பெயர் பெற்றார். வியட்நாமில் இவரின் போர் விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதை அடுத்துக் கைது செய்யப் பட்ட இவர் அங்கு 5 வருடங்கள் போர்க் கைதியாக சிறைவாசம் அனுபவித்தும் இருந்தார். ஜோன் மெக்கைனின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு உலக மற்றும் அமெரிக்கத் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS