உலகம்
Typography

இன்று ஞாயிற்றுக்கிழமை ஈரானின் கெர்மன்ஷா மாகாணத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள டெஸ்காபாத் என்ற நகரில் 6.1 ரிக்டர் அளவில் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இருவர் உயிரிழந்ததாகவும் 250 இற்கும் அதிகமானவர்கள் பலியானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இருமுறை வலிமையான தொடர் அதிர்வுகளும் பதிவாகி உள்ளது.

காயம் அடைந்தவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மிக வலிமையான அதிர்வுகள் ஈராக் தலைநகர் பாக்தாத் இலும் உணரப் பட்டுள்ளது. 2017 நவம்பரில் கெர்மன்ஷாவின் பல பகுதிகளைத் தாக்கிய 7.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 530 பேர் பலியாகி இருந்ததுடன் கடந்த 10 வருடங்களில் ஈரானில் ஏற்பட்ட மிக வலிமையான நிலநடுக்கமாக அது பதிவு செய்யப் பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் கடந்த ஜூலை 29 இற்கும் ஆகஸ்ட் 19 இற்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இந்தோனேசியாவின் லோம்போக் தீவுப் பகுதியில் 6.4 ரிக்டர் அளவுப் பூகம்பமும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர் அதிர்வுகள் காரணமாகவும் பலியானவர்கள் எண்ணிக்கை கணக்கிடப் பட்டு வந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 557 ஆக அதிகரித்திருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இத்தகவலை உறுதிப் படுத்திய இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் மீட்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மேலும் தகவல் அளிக்கையில் தற்போது இந்த நிலநடுக்கங்களால் பாதிக்கப் பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ள இலட்சக் கணக்கான மக்களுக்கு சுத்தமான குடிநீர், மருத்துவ சிகிச்சை, மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் கடும் சிரமத்தை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கத்தால் விளைந்த நிலச்சரிவுகள் காரணமாக ஏராளமான சாலைகள் முடங்கியுள்ளன. மோசமான இடங்களுக்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் மிதிவண்டிகள் மாத்திரமே செல்லக் கூடிய நிலை அங்குள்ளது. இதனால் இந்தோனேசிய அரசு சர்வதேசத்தின் உதவியை நாடியுள்ளது. உலகில் அதிகளவு நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை செயற்பாடு நிலவும் பசுபிக் சமுத்திரத்தின் ரிங் ஆஃப் ஃபைர் என்ற நெருப்பு வளையத்தில் இந்தோனேசியா அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS