உலகம்
Typography

புதன்கிழமை பசிபிக் சமுத்திரத்தின் நியூ கலெடோனியா என்ற தீவுக்கு அருகே கடலுக்கு அடியில் 7.1 ரிக்டர் அளவு கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அதிகாலை 3:50 GMT மணிக்குத் தாக்கியதில் கிட்டத்தட்ட ஒரு மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் நியூ கலேடோனியா, பிஜி மற்றும் வனுவாட்டு ஆகிய 3 தீவுகளையும் தாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப் பட்டது.

இது தவிர பிற பசிபிக் நாடுகளான மார்ஷல் தீவுகள், சமோவா மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றின் கடற்கரைகளிலும் அலைகளின் வீரியம் தீவிரமாக இருக்கும் எனவும் இதனால் இந்த அனைத்துப் பகுதிகளிலும் பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையமான USGS இனால் அறிவுறுத்தப் பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாகப் பாரிய சேதம் ஏற்பட்டதாகவோ அல்லது உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாகவோ இதுவரை தகவல் இல்லை. சுனாமி எச்சரிக்கையும் பேரிடர் கால எச்சரிக்கையும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தினால் விடுக்கப் பட்டிருந்தது.

இந்நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 27 Km ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்ட அனைத்துத் தீவுகளும் ரிங் ஆஃப் ஃபைர் எனப்படும் பசிபிக் சமுத்திரத்தில் அதிகம் நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை செயற்பாடு இடம்பெறும் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS