உலகம்

அண்மைக் காலமாக அமெரிக்காவுக்கான இறக்குமதிப் பொருட்களுக்குத் தீர்வை வரியை அதிகரித்ததன் மூலம் உலக அளவில் வர்த்தகப் போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்போது உலக வர்த்தக அமைப்பான WTO தம்மை நியாயமாக நடத்தவில்லை என்று குற்றம் சாட்டி அதில் இருந்து வெளியேறப் போவதாக எச்சரித்துள்ளார்.

மேலும் தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட முன்பிருந்தே WTO அமெரிக்காவுடன் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்றும் சாடியுள்ளார். கடந்த வருடமே இது தொடர்பான குற்றச்சாட்டை அமெரிக்காவின் பிரபல ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்துக்கு டிரம்ப் தெரிவித்திருந்தார். அமெரிக்காவின் வரி அதிகரிப்பினால் சீனா, இந்தியா ரஷ்யா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றின் வர்த்தகமும் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளதுடன் சீனா பதிலுக்கு அமெரிக்கப் பொருட்களுக்கான வரியையும் அதிகரித்திருந்தது.

இந்நிலையில் WTO இனது விதிமுறைகளை அமெரிக்கா மீறுவது தெளிவாகத் தெரிகின்றது என சீன வணிகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் மெக்ஸிக்கோவுடனான நாஃப்டா என்ற வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் முக்கியமானது என டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்நிலையில் WTO இற்கு டிரம்ப் விடுத்துள்ள அச்சுறுத்தல் அவரின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் உலக வர்த்தக அமைப்பின் வெளிப்படையான வர்த்தக முறை என்பவற்றுக்கு இடையே உள்ள முரண்பாட்டையே காட்டுகின்றது.

WTO இல் புதிய நீதிபதிகளை அமைத்து சச்சரவுகளுக்குத் தீர்வு காண முனைவதை அமெரிக்கா தடுத்து வருவதால் அதன் இறையாண்மைக்கு அமெரிக்கா பங்கம் விளைவிக்கின்றது என அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ராபர்ட் லிதிசைர் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பின் அச்சுறுத்தலுக்கு வெள்ளிக்கிழமை பதில் அளித்த WTO இயக்குனர் அஷெவெடோ இது தொடர்பில் யாரும் உடனே பதற்றம் அடையத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாலஸ்தீனத்துக்கான ஐ.நா இன் அகதிகள் ஏஜன்ஸிக்கு அமெரிக்கா நிதியுதவி அளிப்பதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. UNRWA என்ற இந்த அமைப்புக்கு மிக அதிகளவில் நிதியுதவி அளித்து வரும் நாடு அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.