உலகம்

பிரேசிலின் பண்டைப் பெருமை மிக்க கடலோர நகரான ரியோ டி ஜெனீரோவில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான அருங்காட்சியகம் ஒன்றில் கடும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் கிட்டத்தட்ட 20 மில்லியன் பெறுமதியான 90% வீதமான பொக்கிஷங்கள் தீயில் கருகி அழிந்து விட்டதாக பிரேசில் அரசு கவலை தெரிவித்துள்ளது.

குறித்த அருங்காட்சியகம் தான் லத்தீன் அமெரிக்காவின் மிகப் பெரிய வரலாற்று மற்றும் விஞ்ஞான, கலைப் பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்தத் தீ விபத்துக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப் பட்டுள்ளது. தினமும் நூற்றுக்கும் அதிகமான மக்கள் வருகையளிக்கும் இந்த அருங்காட்சியகத்தில் எகிப்திய, ரோமானியக் கலைப் பொருட்கள், அமெரிக்கக் கண்டத்திலும் பிரேசில் மண்ணிலும் கண்டுபிடிக்கப் பட்ட விலங்குகளின் படிமங்கள் 500 வருடங்கள் பழமையான வரலாற்று ஆவணங்கள், தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைக்கப் பெற்ற வரலாற்று சின்னங்கள் அடங்கலாக 2 கோடிக்கும் அதிகமான அரிய பொருட்கள் பாதுகாக்கப் பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தீ விபத்து திடீரென நள்ளிரவில் ஏற்பட்டதால் உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை. எனினும் இந்த விபத்தில் 12 000 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்து மடிந்த லூசியா என்ற பெண்ணின் எலும்புக் கூட்டுக்கு என்ன ஆனது என்றும் தெரியவில்லை. இந்த விபத்து காரணமாக கணக்கிட முடியாத இழப்பு பிரேசிலுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் 200 ஆண்டுக் கணக்கான உழைப்பு, ஆராய்ச்சி மற்றும் அறிவை இழந்து விட்டோம் எனவும் பிரேசில் அதிபர் மிச்செல் டெமர் டுவிட்டரில் வேதனை தெரிவித்துள்ளார்.

கடும் சரிவில் சென்று கொண்டிருக்கும் பிரேசில் பொருளாதார நிலமை காரணமாக இந்த அருங்காட்சியகத்தை மேம்படுத்த அரசு நிதி ஒதுக்காதது தான் இந்த தீ விபத்துக்குக் காரணம் என ரியோ டீ ஜெனிரோ மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.