உலகம்
Typography

கடந்த சில தினங்களாக ஜெபி புயல் ஜப்பானைப் புரட்டி போட்டிருந்தது.

செவ்வாய்க்கிழமை முதற்கொண்டு ஜப்பான் கடும் மழை மற்றும் வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை அனர்த்தங்களால் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமாகப் பாதிக்கப் பட்டு வருகின்றது. செவ்வாய் மட்டும் மேற்கு ஜப்பானைத் தாக்கிய ஜேபி என்ற தைஃபூன் சூறாவளி காரணமாக 11 பேர் உயிரிழந்தும், 200 பேருக்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தும் 16 இலட்சம் வீடுகள் மின் தடையாலும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

இது தவிர 2000 இற்கும் அதிகமான டிராஃபிக் சிக்னல்கள் செயல் இழந்தும் 10 இலட்சம் மக்கள் வதிவிடங்களை விட்டு வெளியேற வேண்டியும் ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை அதி வேகமாக வீசிய சூறாவளிக் காற்றும், கடல் அலை வெள்ளமும், வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட தீ விபத்தும், கனமழையும் ஜப்பானில் மோசமான அழிவை ஏற்படுத்தியுள்ளன. இதனால் க்யோட்டோ ( Kyoto), ஷிகோகு (Shikoku), ஒசாகா (Osaka) ஆகிய பகுதிகள் பாதிக்கப் பட்டுள்ளதுடன் தற்போது புயல் வடகிழக்குத் திசையில் ஜப்பான் கடலை நோக்கி இந்தப் புயல் நகர்ந்துள்ளது.

உலக அளவில் மிகப் பெரிய பேரிடர்களையும் முழுவதும் எதிர்கொண்டு தன்னம்பிக்கையுடன் துளிர் விட்டு எழுந்து பிற நாடுகளுக்கும் ஒரு முன்மாதிரியாக விளங்கும் ஜப்பானில் புயல், மழை, வெள்ளம் மற்றும் நிலநடுக்கத்தினை சமாளிக்கும் விதமாகவே அதன் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. மேலும் எந்தவொரு அனர்த்தத்துக்கும் முன் கூட்டியே கணித்து எச்சரிக்கையும் விடுக்கப் பட்டு விடும். இருந்த போதும் இம்முறை ஜப்பானை ஜெபி புயல் புரட்டிப் போட்டுள்ளது. இதிலிருந்து மீள்வதற்கு முன்பாகவே ஜப்பானின் வடக்கே உள்ள ஹொக்கைடோ என்ற தீவில் வியாழன் அதிகாலை 3:08 மணிக்கு 6.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

1.9 மில்லியன் மக்கள் வாழும் ஹொக்கைடோ தீவின் தலைநகரான சப்போரோவில் இந்த நிலநடுக்கத்தால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் பலியான 8 பேரின் சடலங்கள் மீட்கப் பட்டுள்ளன. 32 இற்கும் அதிகமானவர்கள் காணாமற் போயுள்ளனர். நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் மோசமான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் 3 மில்லியன் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப் பட்டும் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தும் உள்ளன.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்