உலகம்

2013 ஆமாண்டு எகிப்தில் மொஹமத் மொர்ஸி அதிபர் பதவியில் இருந்து நீக்கப் பட்ட பின் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த 700 பேர் வரை கைது செய்யப் பட்டு வழக்குப் பதிவு செய்யப் பட்டது.

இதில் 75 பேருக்கு மரண தண்டனையும் 47 பேருக்கு ஆயுள் தண்டனையும் என அண்மையில் நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கு சர்வதேச மன்னிப்பு சபையும், மனித உரிமைகள் அமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இது எகிப்து அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனவும் விமரிசனம் செய்துள்ளன. 2013 ஆமாண்டில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள ரப்பா அல் அடவியா என்ற சதுக்கத்தில் 2013 ஆமாண்டு போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதில் நூற்றுக்கும் மேலானவர்கள் கொல்லப் பட்டனர். இது தவிர கைது செய்யப் பட்ட மேலும் நூற்றுக் கணக்கான மக்கள் மீதும் வன்முறை தூண்டல், கொலை மற்றும் சட்ட விரோதச் செயல்கள் ஆகியவற்றில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப் பட்டு வழக்குத் தொடுக்கப் பட்டது.

இதன் போது ஜூலை மாதம் 75 பேருக்கான மரண தண்டனை தீர்ப்பு வெளியிடப் பட்டு சமீபத்தில் உறுதி செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் இவ்வாறு கைது செய்யப் பட்ட மக்கள் மீதான அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்துள்ளன. மேலும் எகிப்தில் தற்போது தடை செய்யப் பட்டுள்ள முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கும் அதன் தலைவரான மொஹமத் படி என்பவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. இது தவிர விருது பெற்ற புகைப் படக் கலைஞரான மஹ்மூத் செய்து என்பவருக்கும் 5 வருட சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. ஆனாலும் வழக்கு விசாரணை நிமித்தம் 5 ஆண்டுகள் இவர் ஏற்கனவே சிறையில் கழித்து விட்டார் என்பதால் இவர் விடுதலையாகலாம் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது.

எகிப்தில் இந்த மரண தண்டனைத் தீர்ப்பை வலது சாரி குழுக்களும் எதிர்த்துக் கருத்து வெளியிட்டுள்ளன. மேலும் இதுவரை எகிப்திய பாதுகாப்புப் படையினர் குறைந்தது 817 பேரைக் கொலை செய்துள்ளதாகவும் இது மனிதாபிமானத்துக்கு எதிரான மிகப் பெரிய குற்றம் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சாடியுள்ளது. போராட்டத்தை அடக்க முற்பட்ட 43 போலிசார் கொல்லப் பட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த வன்முறைகளை அடுத்து எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு ஒரு தீவிரவாத அமைப்பாகப் பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.