உலகம்

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வடக்கு டகோட்டா என்ற மாநிலத்தில் உள்ள ஃபார்கோ சிட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது தம்மைத் தாமே வளர்ச்சியடைந்து வரும் பொருளாதார நாடுகள் என்று கூறிக் கொள்ளும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதியுதவி (மானியம்) அளிப்பது என்பது பைத்தியக் காரத் தனமானது என்றுள்ளார்.

தாம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சரியான வளர்ச்சியடையாத நாடுகளுக்கு அமெரிக்கா மானியம் அளிப்பது நிறுத்தப் படும் என்றும் அமெரிக்கா கூட ஒரு வளர்ந்து வரும் நாடே! இன்னும் சொல்லப் போனால் மற்ற நாடுகளை விட மிக வேகமாக வளர்ந்து வரும் நாடு அமெரிக்கா ஆகும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார் டிரம்ப். மேலும் டிரம்ப் கூறுகையில், உலக வர்த்தக அமைப்பு சீனாவை ஒரு பெரிய பொருளாதார சக்தியாக மாற உதவி வருகின்றது என்றும் அமெரிக்கா ஒரு போதும் வளம்மிக்க பிற நாடுகளுக்கு தீங்கிழைப்பதில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் எம்மை விரும்பாத நாடுகளுக்கும் கூட நாம் பாதுகாப்பு வழங்கி வருகின்றோம் எனவும் இதனால் அவை அமெரிக்காவுக்கு மரியாதை அளிக்க வேண்டும் எனவும் டிரம்ப் கூறியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளளை அதிபர் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிராக வெள்ளை மாளிகை உயரதிகாரிகள் அணி திரண்டிருப்பதாக நியூயோர்க் டைம்ஸ் நாளிதழில் செய்தி வெளியிட்ட கட்டுரையாளரின் பெயரை வெளியிட வேண்டும் என அந்நாளிதழிடம் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். மேலும் குறித்த கட்டுரை தேசத் துரோகம் மற்றும் கோழைத் தனமானது என டிரம்ப் விமர்சித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.