உலகம்
Typography

ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானின் 13 ஆவது அதிபராக பல் மருத்துவர் டாக்டர் ஆரிஃப் ஆல்வி என்பவர் அதிபர் இல்லத்தில் எளிமையாக நடந்த வைபத்தில் பதவியேற்றுள்ளார்.

இந்தப் பதவியேற்பு வைபவத்தில் பாகிஸ்தானின் மூத்த இராணுவ அதிகாரிகள், பிரதமர் இம்ரான் கான் மற்றும் இராணுவத் தளபதியான பாஜ்வா மற்றும் வெளிநாட்டு உயர் அதிகாரிகள் பங்கு பற்றியிருந்தனர்.

முன்னதாக பாகிஸ்தான் அதிபராக இருந்த மம்னூன் ஹுசைனின் பதவிக் காலம் நிறைவு பெற்றதை அடுத்து அங்கு அதிபர் தேர்தல் நடத்தப் பட்டது. இதில் பிரதமர் இம்ரான் கானுக்கு நெருக்கமாக விளங்கியி ஆரிஃப் ஆல்வி வெற்றி பெற்றார். இவர் இன்று பதவியேற்ற போது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஷாகிப் நிசார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பாகிஸ்தானின் ஆளும் தெஹ்ரீக் ஏ இன்சாஃப் கட்சியை தாபித்த சில உறுப்பினர்களில் தற்போது 69 வயதாகும் ஆரிஃப் ஆல்வியும் அடங்குகின்றார்.

5 வருடம் பதவியில் இருந்த மம்னூன் ஹுசைனின் பதவிக் காலம் முடிவுற்றதை அடுத்து நடந்த தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி வேட்பாளர் அயிட்சாஷ் அஷான் மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் மௌலானா ஃபாஷ்ல் உர் ரெஹ்மான் ஆகியோரைத் தோற்கடித்தே ஆரிஃப் ஆல்வி அதிபராகி உள்ளார். 2013 ஆமாண்டு முதல் பாகிஸ்தானின் தேசிய அசெம்ப்ளியில் உறுப்பினராக இவர் கடமையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் பிரதமருக்கு அடுத்த படியாக அதிக அதிகாரம் உள்ள பதவி அதிபர் பதவி என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS