உலகம்

ஞாயிற்றுக்கிழமை தனது 70 ஆவது ஆண்டு பிறந்த தினத்தை வடகொரியா எளிமையாக ஆர்ப்பாட்டம் இன்றி கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளையும் காட்சிப் படுத்தாது அனுசரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆனால் 5 வருடங்களுக்குப் பின்பு ஜிம்னாஸ்டிக் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏனைய வலுவான போட்டிகளையும் வடகொரியா ஞாயிறு முதல் நடத்தத் தொடங்கியுள்ளது.

மேலும் இம்முறை 70 ஆமாண்டு பிறந்த தினக் கொண்டாட்டத்தின் கருப் பொருளாக 'மகிமை வாய்ந்த நாடு' (The Glorious Country) என்பதை வடகொரியா அறிவித்துள்ளது. இக்கொண்டாட்டங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட ஒரு மாதம் நீடிக்கும் எனத் தெரிய வந்துள்ளதுடன் இராணுவ அணிவகுப்பும் அணுவாயுதங்கள் இன்றி ஆயிரக் கணக்கான பொது மக்களால் நடத்தப் படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. வடகொரியாவில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வலுவான போட்டிகளில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த மாத இறுதியளவில் இக்கொண்டாட்டங்களில் பங்கேற்க சிரிய உயர் மட்டக் குழுவொன்றும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் வடகொரியத் தலைநகர் பியாங் யாங் இற்கு விஜயம் செய்யவுள்ளனர். ஆயினும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அல்லது ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் விஜயம் அளிக்க மாட்டார்கள் என்றே எதிர்பார்க்கப் படுகின்றது.

மேலும் தற்போது வடகொரியாவுக்குச் செல்ல தனது நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஜூன் 12 இல் அதிபர் டிரம்ப் மற்றும் கிம் ஜொங் உன் இற்கு இடையேயான சிங்கப்பூர் சந்திப்பை அடுத்து சமீபத்தில் நடைபெறுவதாக இருந்த மைக் பாம்பேயாவின் வடகொரியப் பயணமும் திடீரென ரத்து செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில் இம்முறை இராணுவ அணிவகுப்பில் ஏவுகணைகளையோ அணுவாயுதங்களையோ வடகொரியா காட்சிப் படுத்தாதது என்பது அதன் நேர்மையை வெளிக்காட்டும் ஒரு சந்தர்ப்பமாகவும் இன்னொரு புறம் அதன் நாடகத் தன்மையை வெளிப்படுத்தும் செயலாகவும் கருதப் படுகின்றது.

இதேவேளை தனது 70 ஆமாண்டு பிறந்த நாளை முன்னிட்ட வலுவான விளையாட்டுப் போட்டிக் கொண்டாட்டங்களில் சுற்றுலாப் பயணிகளும் பங்கேற்பதற்காக வடகொரியா சீனாவின் பீஜிங் நகருக்குப் பயணிக்க அதிகளவு விமானங்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளது.