உலகம்
Typography

ஐ.நா பொதுச் சபை தாபிக்கப் பட்டதில் இருந்து இதுவரை  8 ஆண்களே பொதுச் செயலாளர்களாகக் கடமை ஆற்றி வந்துள்ளனர் என்றும் இனி இப்பதவிக்கு பெண் ஒருவர் வருவதே சரியான நேரம் எனவும் தற்போதைய ஐ.நா பொதுச் செயலாளர்  பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.  

மேலும் 70  வருடங்களுக்கு முன்னர் தாபிக்கப் பட்ட ஐ.நா சபையை ஒரு பெண் முதன் முறையாக வழிநடத்தப் போவதைப் பார்க்கத் தான் விரும்புவதாகவும் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். பான் கீ மூனின் 2 ஆவது  5 வருட கால சேவை இவ்வருடம் டிசம்பர் 31 உடன் முடிவடைய உள்ள நிலையிலேயே பான் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். தற்போது பான் கீ மூனின்  பதவிக்குப்  போட்டியாளர்களாக 11 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.  இவர்களில் 6 பேர் ஆண்கள் மற்றும் 5 பேர் பெண்கள் ஆவர். 15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்புச் சபை இதில் ஒரு வேட்பாளரை 193 உறுப்பினர் கொண்ட பொதுச் சபைக்கு பரிந்துரைக்க வேண்டும், பின்னர்  பொதுச் செயலாளரை  இந்த பொதுச் சபை தேர்வு செய்யும்.

அண்மைக் காலத்தில் உலகின் முக்கியமான தலைவர்கள் பதவியில் பெண்கள் தேர்ந்தெடுக்கப் பட்டும் தேர்ந்தெடுக்கப் பட வேண்டிய நிலையிலும் உள்ளனர். உதாரணமாக பிரிட்டனின் புதிய பிரதமராக சமீபத்தில் ஓர் பெண்மணியான தெரேசா மே தேர்வாகி இருந்தார். அமெரிக்காவிலோ அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் முன்னணி வேட்பாளராக ஹிலாரி கிளிங்டன் போட்டியிடவுள்ளார். ஏற்கனவே ஜேர்மனியில் சேன்சலராக ஏஞ்சலா மேர்கெல்  விளங்குகின்ற நிலையில்  ஐ.நா பொதுச் சபையிலும் இவ்வருடம் பொதுச் செயலாளர் பதவிக்கு பெண்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS