உலகம்

பிரிட்டனில் முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா மீது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நச்சுப் பொருள்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட ரஷ்ய நாட்டவர்கள் இருவர் தாங்கள் வெறும் சுற்றுலாப் பயணிகள் என்று ரஷ்ய அரசுத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தனர்.

அலெக்ஸாண்டர் பெட்ரோவ், ரஸ்லன் பாஷிரோவ் என்ற அந்த இருவரும் ஸ்கிரிபாலையும் யூலியாவையும் கொல்ல கடந்த மார்ச் மாதம் முயன்றதாகவும், அவர்கள் இருவரும் ஜி.ஆர்.யு. என்ற ரஷ்ய ராணுவ உளவு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பிரிட்டன் கூறிவந்தது.

இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட அந்த இருவரையும் கண்டறிந்திருப்பதாகவும், அவர்கள் இருவரும் ரஷ்யக் குடிமக்கள்தான் என்றும், ஆனால் அவர்கள் கிரிமினல்கள் அல்ல என்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் சில தினங்களுக்கு முன்பு குறிப்பிட்டிருந்தார். அவர்களே நடந்தது என்ன என்பதை விரைவில் கூறுவார்கள் என்றும் அப்போதும் புதின் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆர்.டி. என்ற ரஷ்ய அரசு நடத்தும் சர்வதேசத் தொலைக்காட்சி சேனலில் பேசிய அவர்கள், நச்சுத் தாக்குதல் சம்பவம் நடந்ததாக கூறப்படும் சாலிஸ்பரிக்கு சுற்றிப் பார்க்க சென்றிருந்ததாகவும், ஆனால் ஒரு மணி நேரத்தில் லண்டனுக்கு திரும்பிவிட்டதாகவும் கூறினர்.

"சாரிஸ்பரி நகரம் சேறாக இருந்தது. நாங்களும் நனைந்துவிட்டோம். உடனடியாக ரயில் பிடித்து லண்டன் திரும்பினோம்" என்று அவர்கள் கூறினர்.

ரஷ்ய கடவுச்சீட்டில் மார்ச் 2-ம்த தேதி மாஸ்கோவில் இருந்து லண்டனுக்கு வந்ததாகத் தெரியவரும் அந்த இருவர் மீதும் குற்றம் சுமத்த போதிய ஆதாரம் இருப்பதாக பிரிட்டனின் கிரௌன் புலனாய்வு சேவை தெரிவித்தது.

சாலிஸ்பரியின் வில்ட்ஷயரில் உள்ள ஸ்கிரிபால் வீட்டின் முன் கதவில் ராணுவ தரத்தில் உள்ள நோவிசோக் என்ற நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நச்சுப் பொருளை தெளித்த பிறகு அவர்கள் ரஷ்யா திரும்பியதாக இரண்டு நாள் கழித்து போலீஸ் கூறியது.

இந்த தாக்குதலால் ஸ்கிரிபாலும், அவரது மகள் யூலியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டு சில வாரம் தீவிர சிகிச்சைக்குப் பிறகு தேறினர். ஆனால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

மூலம் - பிபிசி தமிழ் செய்திகள்