உலகம்

சீனாவின் இறக்குமதிப் பொருட்கள் மீது அமெரிக்கா வரி விதிப்பை அதிகரித்ததால் உலகளாவிய ரீதியில் வர்த்தகப் போர் மூண்டுள்ளது.

கடந்த 17 ஆம் திகதி சீனப் பொருட்கள் மீது 200 பில்லியன் அமெரிக்க டாலர் கூடுதல் வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். முன்னதாக அமெரிக்கப் பொருட்களுக்கு சீனாவும் வரி விதிப்பை அதிகரித்திருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் சீனா தலையிட எத்தனிப்பதாக டிரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் எமது விவசாயிகள், பண்ணைத் தொழிலாளர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் நடைபெறவுள்ள நாடளுமன்றத் தேர்தலின் போக்கை மாற்றுவதற்கு சீனா தீவிர முயற்சி செய்வதாக அந்நாட்டு அரசே ஒப்புக் கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

டிரம்பின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து உரைத்த சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜெங் சுவாங் கருத்துத் தெரிவிக்கையில், மற்ற நாடுகளின் உள்நாட்டு அரசியலில் தாம் ஒருபோதும் தலையிடுவதில்லை என்றும் சீனாவைப் பற்றி மிகக் குறைவாக அறிந்தவர்கள் கூட அந்நாட்டின் இந்தக் குணாதிசயத்தை அறிவார்கள் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.