உலகம்
Typography

வியாழக்கிழமை அதிகாலை பப்புவா நியூகினியாவில் 7 ரிக்டர் அளவுடைய வலிமையான நிலநடுக்கம் தாக்கியுள்ளது. ரபோலில் இருந்து 200 Km தொலைவில் கடலுக்கு அருகே இது தாக்கியுள்ளது.

இதையடுத்து பப்புவா நியூ கினியா கடற் பரப்பிலும் சாலமன் தீவுகளின் கடற் பரப்பிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டு மீளப் பெறப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டதா என்பது குறித்தோ அல்லது சேதாரங்கள் குறித்தோ இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வமான தகவலும் வெளிவரவில்லை. பசுபிக் சமுத்திரத்தின் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ள உலகின் மிக வறிய நாடுகளில் ஒன்றான பப்புவா நியூ கினியாவில் பெப்ரவரியில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கத்தில் 100 பேர் வரை பலியாகி இருந்தனர். இதன் பாதிப்பில் இருந்து மீளும் முற்றாக மீளும் முன்பே இன்றைய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அமெரிக்காவின் வடமேற்கு மாகாணமான புளோரிடாவில் மிகவும் சக்தி வாய்ந்த சூறாவளியான மைக்கேல் என்ற சூறாவளியின் தாக்கத்தால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மணிக்கு சுமார் 125 மைல்கள் வேகத்தில் இந்த சூறாவளி புதன்கிழமை கரையைக் கடந்தது. இந்த சூறாவளி மேலும் நகர்ந்து அலபாமா மற்றும் ஜோர்ஜியா ஆகிய மாகாணங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதன்கிழமை கால மணிக்கு 155 மைல்கள் வேகத்தில் வீசிய இந்த சூறாவளியால் ஏற்பட்ட புயல், மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 13 பேர் வரை கொல்லப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 100 ஆண்டுகளில் மிக மோசமான புயலாக இது அமையும் என புளோரிடா மாகாண ஆளுனர் ரிக் ஸ்காட் கூறியிருந்த நிலையில் இந்த சூறாவளியால் ஏறக்குறைய 3 இலட்சம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின் துண்டிக்கப் பட்டுள்ளது. பெரும்பாலான கல்வி நிலையங்கள் மற்றும் அரச அலுவலகங்கள் மூடப் பட்ட நிலையில் புளோரிடாவில் வசித்து வந்த சுமார் 370 000 பொது மக்களை வெளியேறுமாறு உத்தரவிடப் பட்ட போதும் குறைந்தளவு மக்களே உயரமான இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

அமெரிக்க நிலப் பரப்பில் கரையைக் கடந்த சூறாவளிகளில் இந்த மைக்கேல் சூறாவளி 3 ஆவது சக்தி வாய்ந்த சூறாவளி ஆகும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்