உலகம்
Typography

மீண்டும் ஒருமுறை இந்தோனேசியக் கடற்கரை ஒன்றில் இறந்து கரை ஒதுங்கிய திமிங்கிலத்தின் சடலத்தில் கிட்டத்தட்ட 6 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.

இது ஒவ்வொரு வருடமும் சுமார் மில்லியன் டன் கணக்கான பிளாஸ்டிக் கழிவுகள் உலகில் சமுத்திரங்களில் அடைக்கப் படுவதால் ஏற்படும் சமுத்திர சுற்றுச் சூழல் மாசு குறித்துப் பாரிய கவனம் செலுத்த வேண்டிய தேவையை மறுபடி உணர்த்தியுள்ளது.

இன்றைய கணிப்பின் படி மீள் சுழற்சி, மற்றும் பிளாஸ்டிக் அல்லாத அன்றாடப் பாவனைப் பொருட்களைப் பாவித்தல் எனப் பல வழிமுறைகள் இருந்தாலும் மக்களின் அன்றாட வாழ்வில் இருந்து பிளாஸ்டிக் குப்பைகளைப் பிரித்தெடுக்க முடியாது ஒவ்வொரு நாடும் திணறி வருகின்றது. இதனால் இன்று அணுவாயுதங்களை விட உலக நாடுகளை பிளாஸ்டிக் கழிவுகள் தான் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வருவதாகவும் ஒரு கணிப்புக் கூறுகின்றது. முக்கியமாகக் கடல் உயிரினங்கள் மற்றும் ஏனைய பறவைகள் போன்றவை உட்கொள்ளும் உணவில் பிளாஸ்டிக் கலக்கும் போது அது பல்வேறு நோய்களுக்கு அடித்தளமாகி அவற்றின் அழிவுக்கும் காரணமாகி விடுகின்றது.

ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாகப் பிளாஸ்டிக் கழிவுகளைப் பெருமளவு உட்கொள்ளும் திமிங்கிலங்கள் இறந்து கரை ஒதுங்குவது வாடிக்கையாகி உள்ள நிலையில் திங்கட்கிழமை இந்தோனேசியாவின் சுலவேசித் தீவின் அருகே வக்காடோபி தேசியப் பூங்கா அருகே 31 அடி நீளமுள்ள திமிங்கிலம் இறந்து கரை ஒதுங்கியது. அதன் வயிற்றில் 115 பிளாஸ்டிக் குவளைகள், 25 பிளாஸ்டிக் பைகள், 4 பிளாஸ்டிக் போத்தல்கள் உட்பட 6 கிலோ எடை கொண்ட ஆயிரம் பிளாஸ்டிக் துண்டுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்