உலகம்
Typography

யேமெனில் ஷியா முஸ்லிம் பிரிவு ஹௌத்தி போராளிகளுக்கு எதிராக சவுதி தலைமையிலான வளைகுடா கூட்டணி நாடுகள் 2015 ஆமாண்டு மார்ச் மாதாம் முதல் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றன.

இதன் எதிரொலியாக அங்கு இதுவரை 85 000 குழந்தைகள் பட்டினி காரணமாகப் பலியாகி உள்ளதாக இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் முன்னணித் தொண்டு நிறுவனமான Save The Children தெரிவித்துள்ளது.

இந்த 3 ஆண்டுகளில் இவ்வாறு இறந்த குழந்தைகளில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே அதிகம் என்றும் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே யேமெனில் உள்நாட்டுப் போர் காரணமாக சுமார் 80 இலட்சம் பேர் உணவின்றிப் பரிதவிப்பதாக ஐ.நா சபை சில மாதங்களுக்கு முன்பு தான் தெரிவித்திருந்தது. யேமெனில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயற்பட்டு வருகின்றது.

ஹௌத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ஈரான் செயற்பட்டு வருகின்றது. சவுதி அரேபியா தொடர்ச்சியாக ஹௌத்திக்களின் இலக்குகளைக் குறி வைத்து வான் தாக்குதல் நடத்தி வருகின்றது. யேமெனில் ஒவ்வொரு மாதமும் 50 இற்கும் அதிகமான குழந்தைகள் பட்டினியால் இறந்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியான நிலையில் அண்மையில் தான் போசாக்கின்மையால் பாதிக்கப் பட்ட அமல் ஹுசைன் என்ற குழந்தையின் புகைப் படத்தை நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டு வைரலாகி இருந்தது. இப்புகைப் படம் வெளியாகி சில தினங்களுக்குள் அமல் உடல்நிலை மோசமாகி இறந்து விட்டாள்.

போர் முற்றிய போது சவுதி படைகள் யேமெனுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் வரும் ஹோடைதா என்ற மிகப் பெரிய துறைமுகத்தை மூடின. இதனால் தான் பெருமளவு உணவுப் பொருட்கள் வருவது தடைப்பட்டு அங்கு பஞ்சம் ஏற்பட்டு பல ஆயிரக் கணக்கான குழந்தைகள் போசாக்கின்மையால் பலியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. உதவிக் குழுக்கள் தங்களால் இயன்ற உணவுப் பொருட்களை விநியோகம் செய்தும் மக்களின் உணவுத் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால் போர் நிறுத்தப் படா விட்டால் விரைவில் யேமென் பஞ்சத்தால் அழியும் என ஐ.நா எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களாக அங்கு போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப் பட்டுள்ளது. மேலும் சவுதியும், ஐக்கிய அரபு இராச்சியமும் யேமெனில் பஞ்சத்தைப் போக்க 250 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கவும் முன் வந்துள்ளன.

யேமெனில் போர் நிரந்தரமாக முடிவுக்கு வர ஐ.நா இன் நடவடிக்கைகளை சர்வதேசம் கூர்ந்து கவனித்து வருகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS