உலகம்
Typography

பிரான்ஸில் எரிபொருள் விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து அங்கு 3 ஆவது வாரமாக போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இப்ப்போராட்டத்தில் போலிசாருக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்துள்ளதால் அங்கு அவசர நிலைப் பிரகடனம் செய்யப் படலாம் என பிரான்ஸின் அரசச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போராட்டத்தில் போலிஸ் அதிகாரிகள் மீது மஞ்சல் நிற பெயிண்ட் வீசப்பட்டதால் பதிலுக்குப் போலிசார் ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளைப் பிரயோகித்தனர். இச்சம்பவத்தில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 23 பேர் உட்பட நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். மேலும் போலிசாரால் சுமார் 400 பேர் வரை கைது செய்யப் பட்டுள்ளனர். மேலும் ஜி20 மாநாடு முடிந்த பின்னர் உடனடியாகத் திரும்பிய பிரான்ஸ் அதிபர் மக்ரோன் போராட்டம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று சேதங்களைப் பார்வையிட்டார்.

கடந்த 12 மாதங்களில் டீசல் விலை பிரான்ஸில் 23% வீதம் அதாவது ஒரு லீட்டர் விலை 1.24 யூரோவில் இருந்து 1.53 யூரோ வரை உயர்த்தப் பட்டதே இந்தப் போராட்டம் வெடிக்கக் காரணமாகும். 2000 ஆமாண்டுக்குப் பின்னர் எரிபொருள் விலை அதிகரிப்பு இந்தளவுக்கு உயர்ந்திருப்பது இதுவே முதன் முறையாகும். உலகளவில் எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் இதன் மீதான வரி அதிகரிப்பை மக்ரோங் இன்னமும் உயர்த்தியுள்ளதுடன் 2019 ஆமாண்டு இது மேலும் உயரலாம் எனவும் எதிர் பார்க்கப் படுகின்றது.

மஞ்சல் ஜேக்கட் என்றழைக்கப் பட்ட இப்போராட்டம், முதலில் டீசல் விலை அதிகரிப்பைக் கண்டித்து ஆரம்பித்தாலும் பின்பு வாழ்க்கைச் செலவின உயர்வு மற்றும் மக்ரோனின் பிற கொள்கைகளால் பாதிக்கப் பட்டவர்களும் இணைந்ததால் விரிவடைந்துள்ளது. சனிக்கிழமை பிரான்ஸ் முழுதும் 1600 இடங்களில் இடம்பெற்ற போராட்டத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கு பற்றியுள்ளனர். பாரிஸ் தவிர்த்து ஏனைய இடங்களில் இப்போராட்டம் அமைதியாக இடம்பெற்றது. பாரிஸில் மாத்திரம் 8000 பேர் வரை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் என்பதுடன் இந்த ஆர்ப்பாட்டம் பின்பு வன்முறையாக வெடித்து பல வாகனங்கள் நெருப்பு வைக்கப் பட்டன. கடந்த ஒரு தசாப்தத்தில் பாரிஸில் இடம்பெற்ற மிக மோசமான வன்முறையாகவும், கண்டனப் பேரணியாகவும் இந்த ஆர்ப்பாட்டம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS