உலகம்
Typography

பிரான்ஸில் எரிபொருள் விலைக்கு எதிராகவும் வாழ்வாதார செலவுகள் அதிகரித்திருப்பதற்கு எதிராகவும் மஞ்சல் ஜாக்கெட் என்ற பெயரில் 4 ஆவது வாரமாக அங்கு நடைபெற்று வரும் போராட்டத்தில் சமீபத்தில் வன்முறை வெடித்துள்ளது.

இதைத் தொடர்ந்து அங்கு தேசிய ஒற்றுமையை விரைவில் மீட்டெடுப்பதாக பிரெஞ்சு பிரதமர் இடுவா பிலீப் உறுதியளித்துள்ளார்.

கடந்த வாரத்தை விட இந்த வாரம் வன்முறை அதிகம் இருந்ததால் அதனைக் கட்டுப் படுத்த சுமார் 89 000 பாதுகாப்பு அதிகாரிகள் பிரான்ஸ் அரசால் நியமிக்கப் பட்டிருந்தனர். வன்முறை தொடர்பாக இதுவரை 1700 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். மேலும் போராட்டத்தின் போது வன்முறையைக் கட்டுப் படுத்த போராட்டக் காரர்கள் மீது போலிஸார் சக்தி வாய்ந்த கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் ரப்பர் குண்டுகளையும் பிரயோகித்தனர்.

இதேவேளை எந்தவொரு வரியும் எமது தேசிய ஒற்றுமையைக் குலைக்கக் கூடாது என பிரதமர் பிலீப் கருத்துத் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தீவிரமடைந்த வன்முறையினால் ஜன்னல்கள் உடைக்கப் படும் கார்கள் கொளுத்தப் பட்டும் பொதுச் சொத்துக்கு நாசம் விளைவிக்கப் பட்டது. இந்தப் போராட்டத்தில் சுமார் 10 000 பேர் ஈடுபட்டனர். பாரீஸில் பல வருடங்களில் இடம்பெறாத மோசமான போராட்டமாக இது கருதப் படுகின்றது.

மறுபுறம் பாரீஸில் இடம்பெற்று வரும் வன்முறைகள் காரணமாக அங்கு அமைந்துள்ள பிரபல சுற்றுலாப் பகுதியான ஈபிள் கோபுரத்துக்குச் செல்ல சனிக்கிழமை முதல் தற்காலிகத் தடை விதிக்கப் பட்டுள்ளது. மேலும் பாரீஸில் பதற்றம் நிலவும் 14 இடங்களில் பாதுகாப்புப் பலப் படுத்தப் பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்