உலகம்

வரலாற்றில் முதன் முதலாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (UAE) செல்லும் பாப்பாண்டவராக போப் பிரான்சிஸ் விரைவில் பெருமை பெறவுள்ளார்.

அதாவது அவர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விரைவில் செல்லவுள்ளதாகவும் எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை அபுதாபியில் நடைபெறும் கூட்டத்தில் சொற்பொழிவு ஆற்றுவார் என்றும் வத்திக்கான் அரச நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அபுதாபி இளவரசர் சேக் முகமது பின் சையத் அல் நகைன் இன் அழைப்பை ஏற்று பாப்பரசர் அங்கு செல்லவுள்ளார். போப் பிரான்சிஸ் இன் இந்த வருகை அனைத்து மத நல்லிணக்கத்துக்கு வழி வகுக்கக் கூடிய ஒன்று எனவும் கலாச்சார இணைப்புக்கான மற்றுமொரு அடையாளமாக இது இருக்கும் எனவு அபுதாபி அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக அரபு மொழி பேசும் லெபனான், எகிப்து போன்ற நாடுகளுக்கு பாப்பரசர் ஏற்கனவே விஜயம் செய்துள்ள நிலையில் முதன் முறையாக வளைகுடா நாடு ஒன்றுக்கு செல்லும் முதல் கிறித்தவ மதத் தலைவராக போப் பிரான்சிஸ் பெயர் பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.