உலகம்

யேமெனில் சமீபத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப் பட்ட தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தின் முக்கிய மூத்த தளபதி ஒருவர் பலியானதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கொல்லப் பட்ட தீவிரவாதி அப் பய்டா மாகாணத்தில் அல்கொய்தா பிடியில் இருந்த பகுதிகளில் உள்ளூர் தளபதியாக இருந்த வந்த படாவி எனத் தெரிய வந்துள்ளது.

2000 ஆமாண்டு ஆக்டோபரில் USS Cole என்ற அமெரிக்கப் போர்க் கப்பல் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த போது அதன் மீது ஆயுதத் தாக்குதல் தொடுத்த அல்கொய்தா தீவிரவாதிகளால் 17 அமெரிக்கக் கப்பற்படை சிப்பந்திகள் கொல்லப் பட்டிருந்தனர். இத்தாக்குதலுக்கு மூளையாகச் செயற்பட்டவன் இந்த படாவி என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அல்கொய்தாவின் ஆதிக்கம் நிறைந்த அல் பய்டா பகுதி வழியே தனி வாகனம் ஒன்றில் படாவி சென்று கொண்டிருந்த போது அவர் மீது அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப் பட்டார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. எனினும் இந்தத் தகவலை யேமெனைச் சேர்ந்த அல்கொய்தா இயக்கம் இன்னமும் உறுதிப் படுத்தவோ மறுக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.