உலகம்
Typography

அந்தமான் தீவுப் பகுதிகளை இன்று ஞாயிறு இரவு பபுக் புயல் கடப்பதால் அங்கு ஆரெஞ்சு நிற எச்சரிக்கை சமிக்ஞை விடுக்கப் பட்டுள்ளது.

இன்றும் நாளையும் அந்தமான் தீவுப் பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவிக்கப் பட்டுள்ளதுடன் இன்னும் இரு நாட்களுக்கு அந்தமான் மற்றும் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மீன் பிடிக்க வேண்டாம் என மீனவர்களுக்கும் வானிலை ஆய்வு மையத்தால் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

65 தொடக்கம் 75 Km வேகத்தில் புயல் வீசலாம் எனவும் இதனால் தரை வழி மற்றும் வான் வழிப் பயணமும் தடைப்பட்டு உயிராபத்தும் பொருட்சேதமும் ஏற்படும் அபாயமும் உள்ளதாகவும் எச்சரிக்கப் பட்டுள்ளது. அதிகபட்சமாக 85 Kmph வேகத்திலும் இந்த சைக்கிளோன் புயல் அந்தமான் நிக்கோபார் தீவுகளை ஞாயிறு இரவு கடக்கும் போது வீசலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் புயல் பின்னர் வடகிழக்குத் திசையில் பயணித்து மியான்மார் கடற்கரையினையும் கடந்து அதன் பின் வலு இழக்கும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

இதேவேளை கிறிஸ்துமஸ் தினத்துக்குப் பின்னதாக பிலிப்பைன்ஸைத் தாக்கிய மோசமான புயலினாலும், கடும் மழை மற்றும் நிலச்சரிவுகளாலும் அங்கு ஏற்பட்ட உயிரிழப்பு 126 ஆக அதிகரித்துள்ளது என ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முக்கியமாக பருவ மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கித் தான் பலர் இறந்துள்ளனர். டிசம்பர் 29 அளவில் மத்திய மற்றும் கிழக்கு பிலிப்பைன் தீவுகளைத் தாக்கிய புயலினால் மனிலாவில் இருந்து தென்கிழக்கே உள்ள பைக்கோல் என்ற மலைப் பிராந்தியத்தில் மாத்திரம் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

பண்டிகைத் தினம் என்பதால் பல பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தயங்கியதாலும் அரசினால் இந்த புயலின் வீரியம் முறையாகப் பிரகடனப் படுத்தப் பட்டு முன்கூட்டியே பொது மக்களை வெளியேற்றாததாலுமே இந்தளவு உயிரிழப்பு ஏற்பட்டதாகத் தெரிய வருகின்றது. இருந்த போதும் சுமார் 152 000 பொது மக்கள் புயல் காரணமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வைக்கப் பட்டதுடன் இதில் 75 பேர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகின்றது.

பிலிப்பைன்ஸை ஒரு வருடத்தில் குறைந்த பட்சம் 20 தைஃபூன் புயல்கள் தாக்கி வருகின்றன. இதனால் ஒவ்வொரு வருடமும் அங்கு நூற்றுக் கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். அண்மைக் காலத்தில் அங்கு தாக்கிய மோசமான தைஃபூன் புயலாக ஹையான் என்பது பதிவு செய்யப் பட்டுள்ளது. 2013 ஆமாண்டு மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய ஹையான் புயலுக்கு அங்கு 7360 பேர் பலியாகியோ காணாமாற் போயோ இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்