உலகம்
Typography

மதத்துக்கு எதிராக நாத்திகக் கொள்கைகளைக் கொண்டிருந்ததால் குடும்பத்தினரின் அடக்குமுறையில் இருந்து தப்பிக்க சவுதியை விட்டு வெளியேறி குவைத்துக்குப் பயணம் செய்து கொண்டிருந்த போது அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சித்த ரஹாஃப் மொகமது அல் குனான் என்ற 18 வயது இளம் பெண் தாய்லாந்தில் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளார்.

ஆனால் தான் தாயகமான சவுதிக்குத் திரும்பினால் என் குடும்பத்தினரே என்னை நிச்சயம் கொலை செய்து விடுவர் என அவர் பாங்கொக் சுவர்ணபூமி விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் கதறி அழுது தனக்குப் புகலிடம் அளிக்குமாறு கோரியுள்ளார். சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் அண்மையில் துருக்கியில் படுகொலை செய்யப் பட்டதை அடுத்து சவுதியின் அடக்குமுறையைப் பிரதிபலிக்கும் இன்னொரு சம்பவமாக இது தென்படுவதாக மேற்குலக ஊடகங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.

சுவர்ணபூமி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப் பட்ட ரஹாஃப் இனை சவுதி மற்றும் குவைத் அதிகாரிகள் சுற்றி வளைத்து அவரின் பயண ஆவணங்களைப் பறித்துக் கொண்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. ஞாயிற்றுக்கிழமை தனது டுவிட்டரில் பதிவிட்ட ரஹாஃப் குவைத்துக்குத் தன்னை நாடு கடத்துவதற்காக குவைத் ஏர்வேஸ் விமானத்தில் திருப்பி அனுப்ப முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும், இதைத் தடுத்து நிறுத்தித் தன்னைக் காப்பாற்றுமாறு தாய்லாந்து அரசுக்கும் காவற்துறைக்கும் விண்ணப்பிக்கின்றேன் என்றும் மனிதத் தன்மையுடன் தனக்கு உதவி செய்யுமாறு வேண்டிக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து AFP ஊடகத்துடனும் அவர் பேசியுள்ளார். தற்போது ரஹாஃபின் டுவிட்டர் பக்கம் முடக்கப் பட்டுள்ளது. அவரின் நிலை என்னவென்று தெரியவில்லை. பேங்காக்கில் உள்ள சவுதி தூதரகத்தைத் தொடர்பு கொண்டு ரஹாஃபின் தந்தை அவரைத் திருப்பி அனுப்பும் படி கோரியுள்ளார். இந்நிலையில் ஐ.நா அகதி முகாம் வெளியிட்ட தகவலில் புகலிடம் கேட்கும் ஒருவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பின் அவரை சொந்த நாட்டுக்கு அனுப்ப முடியாது என்று தெரிவித்துள்ளது.

தனது தலை முடியை கட்டையாக வெட்டியதற்காக ரஹாஃபின் குடும்பத்தினர் அவரை 6 மாதம் ஒரு அறையில் பூட்டி வைத்ததாகவும் தான் ஒரு நாத்திகவாதி என்பதால் எனது சுதந்திரமான வாழ்க்கையினை நான் சவுதியில் வாழ முடியாது எனவும் ரஹாஃப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்