உலகம்
Typography

இங்கிலாந்து முறைப்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் எனப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஐரோப்பிய கூட்டமைப்பிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தத்தை பிரதமர் தெரேசா மே மேற்கொண்டிருந்தார்.

இதற்கு நவம்பரில் ஐரோப்பிய கூட்டமைப்பு தனது ஒப்புதலை அளித்த போதும் பிரிட்டன் பாராளுமன்றத்தில் இது பெரும்பான்மையான வாக்குகளால் தோற்கடிக்கப் பட்டது.

இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்க் கட்சிகள் மட்டுமல்லாது தெரேசா மேயின் சொந்தக் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. பிரெக்ஸிட் ஒப்பந்தம் தோல்வியுற்றதை அடுத்து பிரதமர் தெரேசா மேயின் அரசு மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் எதிர்க் கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெரேமி கார்பின் தலைமையில் கொண்டு வரப் பட்டது.

மிகுந்த பரபரப்பின் மத்தியில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 306 ஓட்டுக்களும், எதிராக 325 ஓட்டுக்களும் கிடைத்தால் 19 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தெரேசா மே அரசு பிழைத்துக் கொண்டுள்ளது. இதை அடுத்து ஆக்கபூர்வமான முறையில் பிரெக்ஸிட் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க அனைத்துக் கட்சி எம்பிக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என தெரேசா மே கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் 21 ஆம் திகதி பிரெக்ஸிட் தொடர்பாக மாற்றுத் திட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய நெருக்கடிக்கு தெரேசா மே தள்ளப் பட்டுள்ளதாக இலண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் விவகாரத்திலேயே மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 170 முன்னணி தொழில் அதிபர்களும், தொழிற்கட்சித் தலைவர் ஜெரெமி கார்பினும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்