உலகம்
Typography

மத்திய மெக்ஸிக்கோவில் வெள்ளிக்கிழமை பெட்ரோல் காவிச் செல்லும் எரிபொருள் குழாய் திடீரென வெடித்துச் சிதறியதில் அதில் சிக்கி 66 பேர் வரை பலியாகி உள்ளனர்.

மெக்ஸிகோ சிட்டியில் இருந்து 62 மைல் தொலைவில் ஹிடால்கோ என்ற மாநிலத்திலுள்ள சிறிய நகரம் ஒன்றில் திருடர்கள் சிலர் சட்ட விரோதமாக எண்ணெய் திருட முற்படுகையில் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது.

இந்தக் கசிவினூடாக வெளியேறும் பெட்ரோலை சேகரிக்க ஏராளமான பொது மக்கள் முயன்ற போது திடீரன வெடி விபத்து ஏற்பட்டதால் தான் இத்தனை உயிரிழப்பு எனத் தெரிய வருகின்றது. கசிவு ஏற்பட்ட உடனேயே வெடிப்பு ஏற்பட முன்பு பொது மக்களை அகற்றுவதற்கு இராணுவம் தவறிய போதும் அதனை மெக்ஸிக்கோ அதிபர் அண்ட்ரெஸ் மானுவேல் லோபெஸ் ஒப்ரடொர் பெரிதாகக் காட்டிக் கொள்ளவில்லை. கடந்த சில வருடங்களில் மெக்ஸிக்கோவில் ஏற்பட்ட மிக மோசமான விபத்தான இதில் மேலும் 76 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப் படுகின்றது.

அண்மைக் காலமாக மெக்ஸிக்கோவில் அதன் தலைநகர் உட்பட முக்கிய நகரங்களில் பெட்ரோலுக்கும், டீசலுக்கும் தட்டுப்பாடு நிலவுவதால் பொது மக்கள் மிக நீண்ட நேரத்துக்கு வரிசையில் நின்று பெரும் விலை கொடுத்து அதனை வாங்க வேண்டியுள்ளது. இதனால் அங்கு அரசின் பார்வைக்குத் தெரியாது சட்ட விரோதமாக அதிகளவில் பெட்ரோல் திருட்டு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்