உலகம்
Typography

சமீபத்தில் மத்திய தரைக்கடல் பகுதியில் இருவேறு கப்பல்கள் மூழ்கி ஏற்பட்ட விபத்தில் 170 அகதிகள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப் படுவதாக ஐ.நா சபையின் அகதிகள் பிரிவான UNHCR தெரிவித்துள்ளது.

இதில் 117 அகதிகள் இருந்த கப்பல் லிபிய கடற் பரப்பில் மூழ்கியதாக இத்தாலியின் கடற்படை கூறியுள்ளது.

53 பேருடன் பயணித்த மற்றுமொறு படகு மத்திய தரைக்கடலின் மேற்கே அல்போரான் என்ற கடற்பரப்பில் காணாமற் போனதாகத் தெரிய வருகின்றது. 2018 ஆமாண்டு மட்டும் மத்திய தரைக் கடலினூடாக இடம்பெயர முயன்ற அகதிகள் கப்பல்கள் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் சுமார் 2200 இற்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளதாகப் புள்ளி விபரம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய தரைக் கடலில் கவிழ்ந்த கப்பலின் சரியான இடம் மற்றும் அதில் இருந்தவர்களது தற்போதைய நிலை குறித்த உறுதியான தகவல் இன்னமும் வெளியாகவில்லை. ஆனால் சுமார் 24 மணித்தியாலம் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒருவர் காப்பாற்றப் பட்டு மொரொக்கோவில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாகச் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் லிபியக் கடற்பரப்பில் மூழ்கிய கப்பலில் 120 பேர் இருந்ததை விபத்தில் உயிர் பிழைத்த மூவர் உறுதிப் படுத்தியுள்ளனர். இக்கப்பலில் மூழ்கியவர்களைக் காப்பாற்ற இத்தாலிய விமானப் படை இரு தெப்பங்களை வீசியதாகவும், பின்னர் ஹெலிகாப்டர்கள் மூலம் 3 பேர் மீட்கப் பட்டதாகவும் தகவல் கூறுகின்றது. இம்மூவருக்கும் தற்போது லம்பெடுசா தீவில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகின்றது.

2019 ஆமாண்டின் முதல் 16 நாட்களில் மாத்திரம் சுமார் 4216 குடியேறிகள் மத்திய தரைக் கடற் பகுதியைக் கடந்துள்ளனர். இது கடந்த வருடத்தை விட இரு மடங்கு அதிகமாகும். சமீப காலமாக இத்தாலி உட்பட பல ஐரோப்பிய நாடுகள் அகதிகளை பெருமளவில் ஏற்றுக் கொள்ள மறுப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்