உலகம்
Typography

2021-க்குள் டிரைவர் இல்லாத டாக்ஸிகள்' களமிறக்க ஃபோர்டு கார் தயாரிக்கும் நிறுவனம் தீவிரம் காண்பித்து வருகிறது. 

2021-ம் ஆண்டு முதல் ஓட்டுனர்களே இல்லாத தானியங்கி கார்களை வெளியிடப் போவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது. அதோடு நிற்காமல் , 'ரைட் ஷேரிங்' என்று சொல்லப்படும் 'ஷேர் ஆட்டோ' போன்ற சேவையிலும், இந்தத் தானியங்கி ரக கார்களை பயன்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

இதுகுறித்துப் பேசிய, அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் பீல்ட்ஸ், சிலிக்கான் வேலியில் இந்த திட்டத்திற்காக முதலீட்டை பெருக்க ஃபோர்டு முடிவு செய்துள்ளது. 'செமி ஆட்டோமேட்டிக்' என்று சொல்லப்படும், பாதி தானியங்கும் அமைப்பு கொண்ட கார்களில், முதலீட்டை மூன்று மடங்காகவும் பெருக்க உள்ளோம் என்று கூறினார்.  

ஃபோர்டு நிறுவனத்தின் போட்டியாக விளங்கும் 'ஜெனரல் மோட்டார்ஸ்' நிறுவனம் ஜனவரி மாதம் 'லிப்ட்' என்ற சேவையில் ஐநூறு மில்லியன் அமெரிக்க டாலர்களை இதே போல முதலீடு செய்தது. ஆனால் ஃபோர்டு இதனைப் பற்றி கவலைப்படவில்லை. முதலில் இதனை முடிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமில்லை. மக்களிடம் தரமான கார்களை கொண்டு போய் சேர்ப்பதே எங்கள் வேலை. போட்டி முக்கியம் என்று சொல்லி தரமில்லாத கார்களை மக்களிடம் கொண்டுபோக முடியாது. 'டெஸ்லா' நிறுவனத்தின் 'ஆட்டோ பைலட்' வசதியை பயன்படுத்தி விமானி உயிர் இழந்தது நாம் அனைவரும் அறிந்ததுதான். 'லிப்ட்' திட்டத்தினுடனோ, உபெர் போன்ற சேவை நிறுவனங்களுடனோ ஃபோர்டு நிறுவனம் இணைந்து செயல்படுமா என்பது கேள்விக்குறியே. ஃபோர்டு நிறுவனம் தானியங்கி கார்களை தனியாக வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கலாம்  என்கிறார் மார்க் பீல்ட்ஸ்.

போர்டின் ஆராய்ச்சி துணைத்தலைவர் கென் வாஷிங்டன் பேசுகையில், இதே போல, நிறைய தொழில்நுட்பங்கள் இன்னும் முழுமையாகாமல் இருக்கிறது. ஆனால், ஃபோர்டு இந்த தானியங்கி துறையில் வெற்றி பெறும் என்கிறார். ஃபோர்டு நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ராஜ் நாயர் பேசுகையில், ஷேர் ஆட்டோ போன்ற சேவையில் தானியங்கி கார்களை பயன்படுத்துவது சரியான முடிவாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். ஓட்டுனர்களே தேவைப்படாத கார்களைத் தயாரிப்பதுதான் எங்கள் இலக்கு. சீனாவை சேர்ந்த 'பைடு' என்ற மிகப்பெரிய இணையதள நிறுவனத்துடன் சேர்ந்து, 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை 'வெலோடைன்' நிறுவனத்தில் ஃபோர்டு முதலீடு செய்துள்ளது. இதன்மூலம் லேசர் தொழில்நுட்பம் கொண்ட சென்சார்களை உற்பத்தி செய்ய முடியும். 'சிவில் மேப்ஸ்' என்ற ஜி.பி.எஸ் நிறுவனத்திலும் ஃபோர்டு முதலீடு செய்துள்ளது. இந்த வருடம் 30 தானியங்கி கார்கள், அடுத்த வருடம் 90 தானியங்கி கார்கள் என்பது ஃபோர்டின் இலக்கு என்று கூறுகிறார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS