உலகம்

அவுஸ்திரேலியாவில் அண்மைக் காலமாக கடும் வெப்பமும் அனல் காற்றும் விளைவித்த தாக்கத்தில் இருந்து மீள முன்பு வடகிழக்கு அவுஸ்திரேலியாவில் தற்போது 12 செ.மீட்டருக்கும் அதிகமான கடும் பருவ மழை காரணமாகப் பெய்துள்ளது.

இதனால் குயின்ஸ்லேண்ட் நகரின் அனைத்து அணைகளும் நிரம்பி வழிவதுடன் பல இடங்களில் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது.

20 000 இற்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்த நிலையில் தற்காலிக பாசறைகளில் அவர்கள் தங்க வைக்கப் பட்டுள்ளனர். இன்னும் சில தினங்களுக்கும் கடும் மழை தொடரும் என்று அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் பாதிக்கப் பட்ட மக்களில் பெருமளவானவர்கள் உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட கிடைக்காது அவல நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர்.

பொது மக்களை வெள்ளத்தில் இருந்து மீட்க இராணுவ வீரர்களும் போர்க்கால அடிப்படையில் பணியில் இறங்கியுள்ளனர். ரோஸ் என அழைக்கப் படும் ஒரு ஆற்றில் இருந்து முதலைகளும், பாம்புகளும் நீரில் அடித்து வரப் பட்டு வீதிகளில் திரிவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதேவேளை தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் பரவி வரும் நச்சுக் காற்று காரணமாக பொது மக்களது கண்களிலும், மூக்குகளிலும் இரத்தக் கசிவு ஏற்பட்டு கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். பாங்கொக்கின் நெரிசலான வாகனப் போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைப் புகை என்பவை வளியில் கலந்து 2.5 பி எம் அளவைக் கடந்து நச்சுக் காற்றின் செறிவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பொது மக்கள் மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால் இன்னும் சில வாரங்களுக்கு அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டும், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களைத் தடை செய்யவும், நாடு முழுதும் தொழிற்சாலைகளை ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப் படவுள்ளது.

ஏர்விஷ்வல்ஸ் என்ற நிறுவனம் கடந்த வாரம் நடத்திய ஆய்வொன்றில் உலகளவில் காற்று மாசுபாடு அதிகம் நிறைந்த நாடுகளில் பாங்காக் 5 ஆவது இடத்தில் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.