உலகம்

சனிக்கிழமை முதல் கிழக்கு சிரியாவின் ISIS பதுங்கு நிலைகள் மீது அமெரிக்க ஆதரவு சிரிய ஜனநாயகப் படை எனபபடும் குர்துப் படையான SDF முன்னெடுத்து வரும் இறுதிக் கட்ட போரில் ஈராக்கிய எல்லையில் இருந்து 20 000 பொது மக்கள் இதுவரை வெளியேற்றப் பட்டுள்ளனர்.

சிரியாவில் ஜிஹாதிக்களான ISIS உடனான போர் உடனே முடிவுக்கு வரும் என்றும் அங்கிருந்து அமெரிக்கப் படைகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்றும் கடந்த புதன்கிழமை அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இஸ்லாமிய தேசப் போராளிகளுக்கு ஈராக்கிய எல்லையில் உள்ள இரு முக்கிய கிராமங்கள் கைவசமுள்ள நிலையில் சிரியாவில் தற்போது ரஷ்ய ஈரானிய ஆதரவுடானான அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தான் முக்கிய இடங்கள் உள்ளன. இந்நிலையில் அமெரிக்க ஆதரவு குருதுப் படைகளான SDF இன் ஊடகத்துறை அலுவலகத் தலைவர் முஸ்தஃபா பாலி ராய்ட்டர்ஸ் ஊடகத்துக்குக் கருத்துத் தெரிவிக்கையில், ISIS தீவிரவாதிகளை வேரோடு அழிக்கும் இறுதிக் கட்டப் போர் தொடங்கி விட்டது என்றும் கடந்த 10 நாட்களில் 20 000 பொது மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப் பட்டுள்ளனர் என்றும் கடந்த 4 ஆண்டுகளாக சிரியாவின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் இருந்து படிப்படியாக ISIS தீவிரவாதிகள் அகற்றப் பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

ISIS இன் தலைவனாக அபு பக்கர் அல் பக்தாதி 2014 ஆமாண்டு பொறுப்பேற்றுக் கொண்ட போதும் 2017 இல் ISIS ஆனது சிரியாவின் முக்கிய நகரான ரக்கா இனையும் ஈராக்கின் 2 ஆவது மிகப் பெரிய நகரான மோசுலையும் இழந்திருந்தது. ரக்காவைக் கைப்பற்றிய பின் SDF தெற்கே உள்ள டெயிர் அல் ஷொர் மாகாணத்தில் யூப்பிரட்டிஸ் நதியோரம் உள்ள ஜிகாதிஸ்ட்டுக்களின் நிலைகளைத் தொடர்ந்து கைப்பற்றி வந்துள்ளது.

டிசம்பரில் இஸ்லாமிய தேசப் போராளிகளுடனான போர் பெரும்பாலு வெற்றியடைந்து விட்டதாக அறிவித்த டிரம்ப் 2000 அமெரிக்கத் துருப்புக்கள் அங்கிருந்து பெறப்படுவதாகவும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.