உலகம்

வெனிசுலாவில் தற்போது அரசியல் பதற்ற நிலை நீடித்து வரும் நிலையில் அங்கிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவுள்ள நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்னமெரிக்காவில் அதிக எண்ணெய் வளம் மிகுந்த நாடு வெனிசுலாவாகும். இங்கு மே மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அங்கு நிலவி வரும் கடும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை போன்றவற்றாலும் அதிபர் மதுரோவின் ஆட்சிக்கு எதிராக மக்கள் தொடர்ந்து வீதிகளில் போராடி வருகின்றனர்.

இதே சமயம் எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவைடோ இடைக்கால அதிபராகத் தன்னை அறிவித்துக் கொண்டமைக்கு அமெரிக்கா உட்பட பல சர்வதேச நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில் தான் வெனிசுலா கச்சா எண்ணெய் துறை மந்திரி மேனுவல் குவாவிடோ இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். இவர் திங்கட்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், இந்தியாவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையே மிகச் சிறந்த நல்லுறவு காணப் படுவதாகவும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் இந்தியாவுடனான வணிக உறவு மேம்படும் எனவும் கருத்துத் தெரிவித்தார்.

இதற்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ஊடகங்களுக்குத் தகவல் அளிக்கையில், வெனிசுலா வளங்களைத் திருடி வரும் அதிபர் மதுரோவுக்கு இந்தியா போன்ற நாடுகள் ஆதரவளிக்கக் கூடாது என்றும் அமெரிக்காவுடனும், கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ஏனைய நாடுகளுடனும் இந்தியா கொண்டிருக்கும் நல்லுறவை சிதைக்கும் வண்ணம் அந்நாடு செயற்படக் கூடாது என்றும் கூறியுள்ளார்.