உலகம்
Typography

சீனாவின் மிகப் பாரிய அதிநவீன தொழிநுட்ப டெலிகாம் நிறுவனமான ஹுவாவெய் நிறுவனத்தினைத் தடை செய்ய அமெரிக்க பலவித முயற்சிகளை எடுத்து வருகின்றது.

இந்நிலையில், இன்றைய உலகம் ஹுவாவெய் நிறுவனத்தின் தயாரிப்புப் பொருட்களின் அதிநவீன அதிதிறன் தொழிநுட்ப வசதி இன்றி செயற்படுவது கடினம் என அந்நிறுவனத்தின் தாபகர் ரென் ஷெங்ஃபெய் பிபிசிக்குத் தெரிவித்துள்ளார்.

டிசம்பரில் ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மீறி அந்நாட்டுக்கு ஹுவாவெய் நிறுவனம் தனது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறி கனடாவில் வைத்து ரென் ஷெங்ஃபெய் இன் மகளும் ஹூவாவெய் நிறுவனப் பிரதான நிதி முகாமையாளருமான மெங் வான்ஷௌ இனை அமெரிக்க வேண்டுகோளுக்கு அமைவாக கனடா காவல்துறை கைது செய்தது.

இது முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டது என சீனா விசனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுதவிர கடந்த வருடம் பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக் காட்டி வருங்கால 5G இணைய வேகம் கொண்ட நவீன ஹுவாவெய் உபகரணங்களுக்கு அவுஸ்திரேலிய அரசு தடை விதித்து இருந்தது. மேலும் நியூசிலாந்து அரசும் தனது மிகப் பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனத்தின் பாவனையாளர்கள் 5G வசதி கொண்ட ஹுவாவெய் மாபைல்களைப் பாவிக்கத் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் மேற்கில் வெளிச்சம் குறைந்தால் கிழக்கு ஒளிரும் எனக் கருத்துத் தெரிவித்துள்ள ஹுவாவெய் தாபகர் அமெரிக்கா மட்டுமே உலகைப் பிரதிபலிக்கவில்லை என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மெக்ஸிக்கோ எல்லையில் சுவர் அமைக்கும் விவகாரத்தில் அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனப் படுத்த டிரம்ப் எடுத்த முடிவுக்கு எதிராக அமெரிக்காவிலுள்ள நியூயோர்க் உட்பட 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS