உலகம்

மியான்மாரின் யங்கூனில் இருந்து மாண்டலே நகர் நோக்கிப் பயணித்த மியான்மார் ஏர்லைன்ஸ் விமானத்தில் லேண்டிங் கியர் பழுதான போதும் விமானி சாதுரியமாகச் செயற்பட்டு பயணிகளைக் காயம் ஏற்படாது, உயிர்ச் சேதம் ஏற்படாது காப்பாற்றியுள்ளார்.

எம்ரேர் 190 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் 89 பயணிகளுடன் புறப்பட்டது.

இறங்கச் சற்று முன்பு லேண்டிங் கியர் பழுதானதை உணர்ந்தார் விமானி. குறித்த விமானம் அதிகபட்ச எடையுடன் கூடிய எரிபொருளுடன் தரையில் உரசியவாறு இறங்கினால் வெடிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதை அறிந்திருந்த அந்த விமானி தரை இறங்கும் முன் வேகமாக எரிபொருளைப் பயன்படுத்தித் தீர்க்கும் அவசரகால வழிமுறையைப் பயன்படுத்தி எரிபொருளைத் தீர்த்தார்.

அதன் பின் விமானத்தை மெதுவாக பின்னே உள்ள சக்கரங்கள் மூலம் தரையில் இறக்கி மூக்குப் பகுதியின் அடிப்பாகம் 25 நொடிகள் உரசியபடியே நகர்ந்தவாறு எந்த வித பாதிப்பும் இன்றி அதனை நிறுத்தினார். தனது சாமர்த்தியம் மூலம் தம் உயிரைக் காத்த மியாட் மோ ஆங் என்ற அந்த பைலட்டுக்கு பயணிகள் உணர்ச்சிப் பெருக்குடன் நன்றிகளைத் தெரிவித்தனர். கடந்த புதன்கிழமை பிமான் பங்களாதேஷ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று மியான்மார் விமான நிலையத்தில் ஓடுதளத்தில் இருந்து சறுக்கி விலகியதால் 17 பயணிகள் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.