உலகம்

ரமலான் நோன்பு கடைப் பிடிக்கப் பட்டு வரும் இவ்வேளை மே 20 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு சவுதி அரேபியாவில் இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்காவை நோக்கித் தாக்க வந்த இரு ஏவுகணைகளை சவுதி வான் படை இடைமறித்துத் தாக்கி அழித்துள்ளது.

இந்தத் திடீர் தாக்குதல்களால் சவுதியில் உச்சக் கட்டப் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகாலை 4 மணிக்கு மெக்காவை நோக்கி ஏவப் பட்ட ஏவுகணை ஒன்றை டைப் நகரத்தில் வைத்து சவுதி எதிர்ப்பு ஏவுகணைகள் தாக்கி அழித்தன. அடுத்த சில மணிநேரங்களில் மீண்டும் ஒரு ஏவுகணை ஜெத்தா நகரில் வைத்து சவுதி வான் படையால் தாக்கி அழிக்கப் பட்டது. இதுவும் மெக்கா நோக்கியே ஏவப் பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. முஸ்லிம்களின் புனித கஃபா இருக்கும் மெக்கா நோக்கி ஏவப் பட்ட இந்த ஏவுகணைகளை ஹௌத்திக்களுக்கு ஈரான் இராணுவம் தான் அளித்திருக்க வேண்டும் என சவுதி குற்றம் சாட்டியுள்ளது.

இது தவிர இத்தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருக்குமானால் அந்நாடு கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்பும் எச்சரித்துள்ளார். தற்போது யேமெனில் ஹௌத்திகளுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணிப் படைகள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போரில் ஹௌத்திகளுக்கு ஆதரவாக ஈரான் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.