உலகம்

சிறந்த புத்தகங்கள் அல்லது நாவல்களுக்கு உலகளாவிய அளவில் வழங்கப் பட்டு வரும் உயரிய விருதான 'மேன் புக்கர்' இம்முறை 2019 ஆமாண்டு ஓமன் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான ஜோகா அல்ஹரத்தி என்பவருக்கு வழங்கப் பட்டுள்ளது. இவர் வரைந்த 'செலஸ்டியல் பாடீஸ்; என்ற அரபு மொழி நாவலுக்கே இவ்விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

உலகில் முதன் முறையாக அரபு மொழி நாவல் ஒன்றுக்கு மேன் புக்கர் விருது வழங்கப் பட்டுள்ளமை இதுவே முதன் முறையாகும். இந்தப் புத்தகம் நவீன உலகில் அடிமைகளாக வாழும் 3 சகோதரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கூறுகின்றது. இலண்டனில் அண்மையில் நடந்த இந்த விருது வழங்கும் விழாவில் 50 000 பவுன்ட்ஸ் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 4 1/2 இலட்சம் பணப் பரிசும் ஜோகாவுக்கு வழங்கப் பட்டுள்ளது.

இப்பரிசுத் தொகையில் பாதியை குறித்த நாவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த அமெரிக்கப் பேராசிரியருக்குத் தான் வழங்கவிருப்பதாக ஜோகா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் மேன் புக்கர் விருது இலக்கியத்துக்காக உலகளவில் வழங்கப் பட்டு வரும் மிக உயரிய விருதாகும்.