உலகம்

2016 ஆமாண்டு பிரெக்ஸிட் விவகாரத்தில் உரிய தீர்வு காண முடியாத சூழலில் பதவி துறந்திருந்தார் அப்போதைய பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமெரூன்.

இதையடுத்து 2016 ஜூலையில் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற தெரேசா மே என்பவரும் இதே விவகாரம் காரணமாக அடுத்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளது இங்கிலாந்திலும், ஐரோப்பிய யூனியனிலும் அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெரேசா மே இன் இந்த அறிவிப்பையடுத்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டி ஆரம்பமாகியுள்ளது. இக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பவரே பிரிட்டனின் அடுத்த பிரதமரும் ஆவார் என்ற நிலையில் ஜூலை இறுதிக்குள் இந்த அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப் படலாம் என எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

ஜூன் 7 ஆம் திகதி தான் பதவி விலகப் போவதாக தெரேசா மே அறிவித்துள்ளார். இதனால் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைமைப் பொறுப்புக்கு ஜுன் 12 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இப்போட்டிக்கு முக்கியமாக இதுவரை 4 வேட்பாளர்கள் தயாராகி உள்ளனர். அவர்கள் விபரம் வருமாறு:

வெளியுறவுத்துறை செயலாளர் ஜெரிமி ஹண்ட், சர்வதேச மேம்பாட்டுதுறை செயலாளர் ரோரி ஸ்டூவார்ட், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் போரிஸ் ஜான்சன் மற்றும் முன்னாள் வேலை மற்றும் ஓய்வூதிய செயலாளர் எஸ்தர் மேக்வே ஆகியோர் ஆவர். இதேவேளை தென்னாப்பிரிக்க தேர்தலில் ஆளும் தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து அதிபராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்ட சிரில் ராமபோசா அந்நாட்டின் புதிய அதிபராக மீண்டும் இன்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுக் கொண்டார்.