உலகம்

திங்கட்கிழமை 3 நாள் அரசமுறைப் பயணமாக இலண்டனுக்குப் புறப்பட்டுச் சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் துணைவியார் மெலானியா ஆகியோர் பக்கிங்ஹாம் அரண்மனையில் இங்கிலாந்து அரசி எலிசபெத் II இனால் விமரிசையாக வரவேற்கப் பட்டனர்.

மேலும் இவர்கள் இருவருக்கும் பிரிட்ட இராணி மதிய விருந்து அளித்தார். பிரிட்டனுக்குப் புறப்பட்டுச் சென்ற இவர்கள் அரண்மனைக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்தனர்.

இவர்கள் அரசியாரைச் சந்திக்கும் முன்பு இளவரசர் சார்லெஸ் மற்றும் அவரின் துணைவியார் கமிலா ஆகியோராலும் வரவேற்கப் பட்டனர். இதேவேளை டிரம்பின் அரச முறைப் பயணத்தை எதிர்த்து லண்டன், மான்செஸ்டர், பெல்பாஸ்ட், பிர்மிங்ஹாம், நாட்டிங்ஹாம் உட்பட இங்கிலாந்து முழுவதும் போராட்டங்கள் நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது. மேலும் அதிபர் டிரம்புக்கு எதிராக அவரைக் கோபமான குழந்தை போல் சித்தரிக்கும் இராட்சத பலூன் ஒன்றைப் பறக்க விட்டதும் குறிப்பிடத்தக்கது.

அதிபர் டிரம்ப் பிரிட்டனுக்குப் புறப்பட முன்பு பிரிட்டனின் அடுத்த பிரதமராக போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவளிப்பதாக 'த சன் என்ற ஊடகத்துக்குத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரெக்ஸிட் விவகாரம் காரணமாக அண்மையில் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே பதவி விலகியதை அடுத்து புதிதாக அவரிடத்துக்கு வரவுள்ள பிரிட்டன் பிரதமர் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடாது ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் எனவும் டிரம்ப் கருத்துத் தெரிவித்துள்ளது உலக அரங்கில் மேலும் இன்னொரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதும் நோக்கத்தக்கது.