உலகம்

ஈரான் மீதான கடுமையான பொருளாதாரத் தடை விதிப்பதற்கான நிறைவேற்று ஆணையில் டிரம்ப் கைச்சாத்திட்டுள்ளார்.

இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. மறுபுறம் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என்றும் ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதால் உலக அரங்கில் இந்த விவகாரம் முதன்மை பெற்றுள்ளது.

சமீபத்தில் ஈரான் வான் பரப்பில் அமெரிக்க டிரோன் விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதை அடுத்து அந்நாட்டின் மீது இராணுவத் தாக்குதல் தொடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டதாகவும் பின்பு கடைசி நேரத்தில் அதனைத் திரும்பப் பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தான் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை திங்கட்கிழமை அமெரிக்கா விதித்தது.

இதன் மூலம் ஈரானிய தலைவர் மற்றும் அதிகாரிகள் அமெரிக்காவில் நிதி பரிவர்த்தனி செய்யவும் தடை விதிக்கப் பட்டுள்ளது. ஓவல் அலுவலகத்தில் இவ்விடயம் தொடர்பாக செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசிய போது, 'ஈரான் உட்பட எந்தவொரு நாட்டுடனும் நாம் மோதல் போக்கை விரும்பவில்லை. ஆயினும் ஈரான் ஒருபோதும் அணுவாயுதம் வைத்திருக்க நாம் அனுமதிக்க மாட்டோம் என்பதை மட்டும் என்னால் கூற முடியும்' என்று தெரிவித்திருந்தார்.

இதேவேளை ஈரானின் ஆன்மிகத் தலைவரான அயதுல்லா அலி கமேனியின் சொத்துக்களையும் அமெரிக்கா முடக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஈரானின் அதி உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி அந்நாட்டு அரசியல், இராணுவம் மற்றும் பொருளாதாரம் ஆகிய அனைத்தின் மீதும் அதி உயர் அதிகாரம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.