ஆப்பிரிக்க கண்டத்தின் தென்கிழக்கே இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள தீவு நாடான மடகாஸ்கரில் புதன்கிழமை 59 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப் பட்டது.
இதற்காக மடகாஸ்கர் தலைநகர் ஆண்டனநரிவோவில் உள்ள மைதானத்தில் இராணுவ வீரர்களின் அணிவகுப்பு மற்றும் கச்சேரி போன்ற பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன.
இதைப் பார்த்து மகிழ பல ஆயிரக் கணக்கான மக்கள் மைதானத்தில் திரண்டனர். இந்த நிகழ்ச்சிகள் யாவும் முடிவடைந்த பின்னர் மைதானத்தின் பல நுழைவாயில்கள் ஊடாகவும் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற முயன்ற போது கடும் நெரிசல் ஏற்பட்டது. மைதானத்துக்கு உள்ளே இருந்த ஏனைய நூற்றுக் கணக்கான மக்களும் வெளியேற முயன்றால் கூட்ட நெரிசலைக் கட்டுப் படுத்த முடியாது என்ற காரணத்தால் போலிசார் மைதானத்தின் பல நுழைவாயில்களை அடைத்தனர்.
பின் ஒரு சில நுழைவாயில்களை மாத்திரமே திறந்து மக்களை ஒவ்வொரு குழுவாக வெளியேற்ற முயன்றனர். ஆனால் பொறுமை இழந்த மக்கள் முண்டியடித்துக் கொண்டு வெளியேற எத்தனித்த போது பலர் நிலைகுலைந்து கீழே வீழ்ந்து மிதி பட்டனர். இச்சம்பவத்தால் மைதானமே போர்க் களம் போல் காட்சியளித்தது. இக்கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பரிதாபமாக இறந்து விட்டதாகவும் 75 இற்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்து விட்டதாகவும் பின்னர் தெரிய வந்துள்ளது.
மடகாஸ்கர் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் இடம்பெற்றுள்ள இந்த அசம்பாவிதம் அங்கு வாழும் பொது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
BLOG COMMENTS POWERED BY DISQUS