உலகம்

அண்மையில் ஹாங் கொங் நாடாளுமன்றத்தில், அந்நாட்டைச் சேர்ந்த மக்கள் பிற நாடுகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களை அந்தந்த நாடுகளிடம் ஒப்படைக்கும் வகையிலான சட்டம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப் பட்டு அதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப் பட்டது.

இந்த ஒப்படைப்புச் சட்டத்துக்கு எதிராக போராட்டக் காரர்கள் பலர் ஒன்று கூடி நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து அதனைச் சூறையாடியுள்ளனர்.

இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு முன்பிருந்தே எதிர்ப்புத் தெரிவித்து வந்த மக்கள் ஏப்பிரல் முதற் கொண்டே சாலைக்கு வந்து கடும் போராட்டங்களை முன்னெடுத்து இந்நிலையில் திங்கட்கிழமை பிரிட்டன் ஆட்சியில் இருந்து சீனாவிடம் ஹாங் கொங் ஒப்படைக்கப் பட்டதன் 22 ஆவது ஆண்டு தினம் அனுசரிக்கப் படுவதை ஒட்டி ஹாங் கொங் நாடாளுமன்றத்தின் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த மக்கள் அதனைச் சூறையாடித் தம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

காவல் துறையினர் தடியடி நடத்துவோம் என்று எச்சரித்தும் மிளகாய் பொடி ஸ்ப்ரே தூவியும் கூட எந்தவிதப் பயனும் கிடைக்கவில்லை. எனவே காவற் துறையினர் இறுதியில் அமைதியான வழியில் போராட்டக் காரர்களைக் கட்டுப் படுத்த முடிவெடுத்தனர். தலைவர்களே இல்லாது டெலிகிராம் மெசேஜ் மூலம் ஒருங்கிணைக்கப் படும் இந்தப் பல ஆயிரக் கணக்கான மக்கள் சீன அரசின் கடும் போக்குக்கு எதிராக அவ்வப்போது ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

இதேவேளை நாடாளுமன்றத்தை சூறையாடியது என்பது தீவிர வன்முறையின் அடையாளம் என ஹாங் கொங் தலைவர் கேரி லேம் என்பவர் கண்டனம் தெரிவித்துள்ளார். திங்கள் இரவு நாடாளுமன்றத்துக்குள் புகுந்து 1 மணி நேரம் அதனை ஆக்கிரமித்து இருந்த போராட்டக் காரர்கள் பின்னர் போலிசாரின் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப் பட்டு வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.