உலகம்

அண்மைக் காலமாக உலகை அச்சுறுத்தி வரும் ISIS தீவிரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை அதிகரிக்கப் பட வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைக்கு ஜேர்மனி இணங்க மறுத்துள்ளது.

மேலும் சிரியாவுக்கு இராணுவத்தை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என்றும் திங்கட்கிழமை அந்நாட்டு அரசு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் குறிட்து ஜேர்மனியின் அரச செய்தித் தொடர்பாளரான ஸ்டெஃபன் சீபெர்ட் என்பவரைத் தொடர்பு கொண்ட போது, ISIS தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப் பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்பதைத் தாம் விரும்புகின்ற போதும், மேலதிக இராணுவ வீரர்களை அனுப்பும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை ஊடகப் பேட்டி ஒன்றின் போது சிரியாவுக்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதியான ஜேம்ஸ் ஜெஃப்ரி என்பவர் கருத்துத் தெரிவிக்கும் போது வட சிரியாவில் ISIS தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஜேர்மனி இராணுவத்தை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் இது தொடர்பில் ஜூலை இறுதிக்குள் ஜேர்மனியின் பதிலை எதிர்பார்ப்பதாகவும் அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யேமெனில் போரிட்டு வரும் ஐக்கிய அரபு அமீரகம் சவுதி அரேபியாவுடனான ஆலோசனையின் பின் அங்கு தமது படைகளைக் குறைக்க முடிவெடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.