உலகம்

கடந்த ஜூலை 6 ஆம் திகதி தனது 84 ஆவது பிறந்த நாளை அனுசரித்த திபேத்தின் புத்த மத ஆன்மிகத் தலைவரும் துறவியுமான தலாய் லாமாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் திங்கட்கிழமை ஈடுபட திபேத்திய அகதிகளுக்கு அனுமதி மறுத்துள்ளது நேபால் அரசு.

இதற்கு முக்கிய காரணமாக சீனாவுடன் அதிகரித்து வரும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவு என்பது அமைந்துள்ளது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக மேற்குலக நாட்டைச் சேர்ந்தவர்கள் கூட இவரின் பிறந்த நாளைக் கொண்டாட அனுமதி மறுத்துள்ளது நேபாலின் கே பி சர்மா ஒலி தலைமையிலான அரசு. கடந்த காலங்களில் இந்தியா நோக்கித் தமது நிலப் பரப்பின் ஊடாகப் பயணித்த திபேத்திய அகதிகளைக் கைது செய்து சீன அதிகாரிகளிடம் நேபால் அரசு கையளித்திருந்த வரலாறும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நேபாலில் குறைந்த பட்சம் 20 000 திபேத்தியர்கள் வசிப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டம் மற்றும் பாதுகாப்பு போன்ற காரணங்களால் தான் தலாய் லாமாவின் பிறந்த நாளைக் கொண்டாட அனுமதி மறுக்கப் பட்டதாக நேபாலின் அரச ஊடகத்துறை ராய்ட்டர்ஸ் ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளது. ஆனால் இது அப்பட்டமான மனித உரிமை மீறல் எனப் பொது மக்கள் அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. நேபாலின் பல பாடசாலைகளில் தற்போது சீன மொழி கட்டாயப் பாடம் ஆக்கப் பட்டுள்ளது.

மேலும் அண்மையில் நேபாலின் இராணுவத் தலைமை அதிகாரி பீஜிங்கிற்கு விஜயம் செய்தமைக்கு இந்திய அரசு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.