உலகம்

SDG (Sustainable Development Goals) எனப்படும் 2030 ஆமாண்டுக்குள் உலகின் முக்கிய பிரச்சினைகளைக் கையாளுவதற்கான இலக்குகளை எட்டும் திட்டத்தில் உலக அரசாங்கங்கள் போதுமானவற்றை செய்து வருவதில்லை என புதன்கிழமை வெளியான அறிக்கை ஒன்றில் ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

இப்பிரச்சினைகளில் முக்கியமாக உலகின் சமநிலை, மற்றும் தீவிர காலநிலை மாற்றத்தை எதிர் கொள்ளல் என்பவை அடங்கியுள்ளன.

2015 ஆமாண்டு சுமார் 193 ஐ.நா உறுப்பு நாடுகளால் ஒத்துக் கொள்ளப் பட்ட இந்த 17 முக்கிய SDG இலக்குகள் தொடர்பாக ஆராய்வு நடத்தும் ஐ.நா இன் உயர் மட்ட அரசியல் கருத்துக் கணிப்பில் சுமார் 2000 பேர் பங்கு பற்றி வருகின்றனர். ஐ.நா இன் பொருளாதார மற்றும் சமூகவியல் துறையின் தலைவர் லியு ஷென்மின் கருத்துத் தெரிவிக்கையில் கால நிலை மாற்றத்தை சீரமைக்க எமக்கு இருக்கும் காலம் குறுகிக் கொண்டே வருவதாகத் தெரிவித்துள்ளார். இது தவிர எமக்கு இருக்கும் முக்கிய சவால்களாக வறுமை, சமச்சீரின்மை மற்றும் ஏனைய பூகோள சவால்களும் விளங்குகின்றன என அவர் தெரிவித்தார்.

சில இடங்களில் காணப் படும் மிகத் தீவிர வறுமை, விரிவாகி வரும் நோய்த் தொற்று, அதிகரித்து வரும் மின்சாரப் பாவனை, 5 வயதுக்குக் குறைவான சிறுவர்களில் ஏற்படும் மரண வீதத்தை 49% வீதமாகக் குறைத்தல் என்பவையும் மிக அண்மித்த் தேவைகளாக உருவெடுத்துள்ளன.

ஐ.நா செயலாளர் அந்தோனியோ கட்டரஸ் இது தொடர்பில் வெளியிட்ட கருத்தில், கடல் மட்டம் உயர்தல், சமுத்திரங்கள் அசிட் தன்மையாக மாசுறும் வீதம் அதிகரித்தல், இந்த நூற்றாண்டில் கடந்த 4 வருடங்களே மிக அதிக வெப்பம் கூடிய ஆண்டுகளாகப் பதிவாகியிருத்தல், அழிந்து போகும் ஆபத்தில் உள்ள ஒரு மில்லியன் தாவரங்கள் மற்றும் விலங்கு வகைகள், பரிசோதிக்கப் படாத நிலையில் அதிகரித்து வரும் நில சீரழிவு போன்றவை 2030 ஆமாண்டுக்குள் கவனிக்கப் பட்டு தீர்க்கப் பட வேண்டிய முக்கிய பிரச்சினைகள் என்று தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.