உலகம்
Typography

இன்று ஜூலை 20 ஆம் திகதி சந்திரனில் மனிதன் முதன் முதல் கால் பதித்து 50 வருடங்கள் பூர்த்தியடைகின்றது.

இதை முன்னிட்டு கூகுள் தனது முகப்பு லோகோவில் ஒரு குறும் யூடியூப் வீடியோவை பதிவேற்றி சிறப்பு சேர்த்துள்ளது. நாமும் இது தொடர்பான முக்கிய தகவல்களைப் பார்ப்போம். அப்போல்லோ 11 என்ற விண்கலத்தை தாங்கியவாறு நிலவுக்கு ஏப்பிரல் 16 ஆம் திகதி பூமியில் இருந்து Saturn V என்ற ராக்கெட்டு மூலம் புளோரிடாவில் உள்ள கென்னெடி விண்வெளி நிலையத்தில் இருந்து 3 விண்வெளி வீரர்கள் நிலவுக்குப் புறப்பட்டனர்.

அவர்கள் நீல் ஆம்ஸ்ட்ரோங், புஷ் அல்ட்ரின் மற்றும் மைக்கேல் கொலின்ஸ் ஆகியோர் ஆவர். ஜூலை 20 ஆம் திகதி நிலவின் சுற்று வட்டப் பாதையை அடைந்த கொலம்பியா விண் ஓடத்தில் இருந்து பிரிந்து அப்போலோ 11 விண்கலத்தின் ஈகிள் ஓடம் நீல் ஆம்ஸ்ட்ரோங்க் மற்றும் புஷ் அல்ட்ரினுடன் நிலவின் தரையில் இறங்கியது. மைக்கேல் கொலின்ஸ் கட்டளைத் தளபதியாக நிலவின் சுற்று வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டிருந்த கொலம்பியா ஓடத்தில் பணியாற்ற அமைதிக் கடல் எனப் பொருள் படும் Mare Tranquillitatis என்று பெயரிடப் பட்ட இடத்தில் ஈகிள் ஓடம் தரையிறங்கியது.

இதில் இருந்து நிலவில் கால் பதித்த முதல் மனிதராக நீல் ஆம்ஸ்ட்ரோங் புகழ் பெற்றார். இதன் போது அவர் கூறிய, 'இது ஒரு சிறு அடி தான்! ஆனால் மனித குலத்துக்கு ஒரு மாபெரும் பாய்ச்சல்!' என்ற கூற்று மிகவும் பிரபலமானது. ஆம்ஸ்ட்ரோங் இறங்கி 19 நிமிடங்களுக்குப் பின் புஷ் அல்ட்ரினும் நிலவின் தரையில் இறங்கினார். இருவரும் இணைந்து விண்கலத்துக்கு வெளியே 2 1/4 மணித்தியாலங்களைக்கு நிலவை ஆராய்ந்து அதன் கூறுகளை சேமித்தனர். இந்த முக்கிய நிகழ்வுகளை உலகம் முழுவதும் இருந்து மில்லியன் கணக்கான மக்கள் தொலைக் காட்சி வழியாக நேரடியாகக் கண்டு களித்தனர்.

அப்போல்லோ 11 விண்கலத்தின் ஆய்வுப் பணிகள் முடிந்து அதன் முக்கிய CM எனப் படும் கட்டளைப் பகுதி மாத்திரம் ஜூலை 24 ஆம் திகதி நிலவுக்குச் சென்ற 3 விண்வெளி வீரர்களுடனும் பூமிக்குத் திரும்பி பசுபிக் பெருங்கடலில் இறங்கியது. அதில் இருந்து பாதுகாப்பாக மீட்கப் பட்ட 3 வீரர்களுக்கும் உலகம் முழுக்க உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.

BLOG COMMENTS POWERED BY DISQUS