உலகம்
Typography

கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் இராணுவத்தால் சிறை பிடிக்கப் பட்ட ஸ்டெனா இம்பெரோ என்ற பிரிட்டனைச் சேர்ந்த எண்ணெய் சரக்குக் கப்பலில் 18 இந்திய மாலுமிகள் கைப்பற்றப் பட்டதை பிடிஐ என்ற செய்தி நிறுவனம் உறுதிப் படுத்தியுள்ளது.

23 பேருடன் பயணித்த இந்த எண்ணெய்க் கப்பல் சர்வதேச கடல் விதிகளை மீறி உள்ளூர் மீன்பிடிப் படகு மீது மோதியதால் அதனைத் தாம் கட்டுக்குள் கொண்டு வந்ததாக ஈரான் விளக்கம் அளித்துள்ளது.

இந்த ஸ்டெனா இம்பெரோ கப்பலில் 18 இந்தியர்கள் தவிர்த்து ரஷ்யா, லாட்வியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த மேலும் ஐவரும் இருந்துள்ளனர். கப்பலின் கேப்டன் இந்தியர் என்றும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் ஊடகவியலாளர்களுக்கு இது குறித்துப் பேசிய இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், இச்சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் ஈரான் அரசுடன் தொடர்புகளை மேற்கொண்டு கப்பலில் இருந்த இந்தியர்களை விரைவில் மீட்டுத் தாயகம் கொண்டு வருவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஸ்டெனா இம்பெரோ கப்பலின் உரிமையாளரான ஸ்டீனா பல்க் என்ற சுவீடன் நாட்டு நிறுவனம் குறித்த கப்பலுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஓமான் கடற்பரப்பில் பிரிட்டன் கொடியுடன் சவுதிக்குச் சென்று கொண்டிருந்த இக்கப்பலானது ஈரானுக்குச் சொந்தமான எண்ணெய் வர்த்தகத்துக்கான ஹோர்முஸ் ஜலசந்தியை அத்துமீறிப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டியே ஈரான் இக்கப்பலைக் கையகப் படுத்தியுள்ளது. இச்செயலானது வளைகுடா பகுதியிலும், ஈரானுக்கும் சர்வதேசத்துக்கும் இடையிலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

அண்மையில் ஈரான் வான் பரப்புக்கு அருகே அமெரிக்க மற்றும் ஈரானிய நாடுகளின் டிரோன் விமானங்கள் சுட்டு வீழ்த்தப் பட்டது மற்றும் சில நாட்களுக்கு முன்பு இன்னுமொரு பிரிட்டன் கொடியுடன் சென்ற கப்பல் கைப்பற்றப் பட்டது போன்ற செயல்களால் ஏற்கனவே ஈரானுக்கும் சர்வதேசத்துக்கும் இடையே உறவில் கடும் விரிசலையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. பல மாதங்களுக்கு முன்பு ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு வெளியேறியதை அடுத்து ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தொடர்ந்து கடுமையாக்கி வருவதும் நோக்கத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS